உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. 

உலக கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தி ஆடிவரும் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. இந்திய அணி ஆடிய முதல் 6 போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக மழையால் கைவிடப்பட்ட போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி தான் வென்றது. 7வது போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி, அந்த போட்டியில் முதல் தோல்வியை அடைந்தது. 

இந்நிலையில், இன்றைய போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. வங்கதேச அணிக்கு இது முக்கியமான போட்டி. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க அந்த அணி கண்டிப்பாக இந்திய அணியை வீழ்த்தியாக வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம், சௌமியா சர்க்கார், தமீம் இக்பால் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்த போட்டியில் இந்திய அணிக்கு கண்டிப்பாக வங்கதேசம் சவால் அளிக்கும். 

இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. விஜய் சங்கர் உலக கோப்பை தொடரிலிருந்து விலகியதால், அவருக்கு பதிலாக அணியில் இணைந்துள்ள மயன்க் அகர்வால், இன்றுதான் இங்கிலாந்து செல்வார். எனவே அவர் உடனடியாக இந்த போட்டியில் ஆடவைக்கப்பட வாய்ப்பில்லை. 

எனவே ராகுல் தொடக்க வீரராகவும் ரிஷப் பண்ட் நான்காம் வரிசையிலும் இறங்குவார். இந்திய அணியில் செய்யப்பட வாய்ப்புள்ள மாற்றங்கள் குறித்து நேற்று பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார், ஒரு ஸ்பின்னர் நீக்கப்பட்டு புவனேஷ்வர் குமார் ஆடவைப்பது குறித்தும் ஜடேஜாவை அணியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்துவருவதாக தெரிவித்திருந்தார். எனவே இன்றைய போட்டியில் ஜடேஜா ஆட வாய்ப்புள்ளது.