நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2 போட்டிகளிலுமே இந்திய அணி படுதோல்வியடைந்தது. இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரஹானே, புஜாரா ஆகியோர் சரியாக பேட்டிங் ஆடவில்லை. அதிலும் புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோரின் மந்தமான பேட்டிங் கடும் விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் உள்ளானது. 

சூழலை பொறுத்து ஆடாமல், டெஸ்ட் போட்டி என்றாலே தடுப்பாட்டம் என்ற மனநிலையுடன் படுமோசமாக ஆடினர். முதல் போட்டியில் ரன்னே அடிக்காமல் வெறுமனே களத்தில் நின்றது விமர்சனத்துக்கு உள்ளானதையடுத்து இரண்டாவது போட்டியில் விஹாரி நன்றாக ஆடினார். ஆனால் ரஹானே, புஜாரா வழக்கம்போலவே மிகவும் மெதுவாக ஆடினர். அப்படி ஆடி, அணிக்கு சாதகமான முடிவை பெற்றுத்தந்திருந்தாலும் பரவாயில்லை. அதுவும் இல்லை. 

இந்நிலையில், ரஹானேவை கடுமையாக விமர்சித்துள்ளார் சந்தீப் பாட்டீல். இதுகுறித்து பேசியுள்ள சந்தீப் பாட்டீல், ரஞ்சியில் மும்பை அணிக்காக ஆடியபோது கூட ரஹானே, ஸ்கோரே செய்யாமல் மந்தமாக பேட்டிங் ஆடியதாக கேள்விப்பட்டேன். பயமும் தோல்வியுமே அவரை இப்படி ஆடவைக்கிறது. வெளிநாடுகளில் நல்ல ரெக்கார்டை வைத்துள்ளார் என்பதெல்லாம் பழைய கதையாகிவிட்டது. 

ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து தூக்கியெறியப்பட்டு, ரஹானே ஒரு டெஸ்ட் வீரராக முத்திரை குத்தப்பட்டுவிட்டார். எனவே அவர் தன்னை டெஸ்ட் வீரராக காட்டிக்கொள்வதற்காகவும் நிலைநிறுத்தி கொள்வதற்காகவும் ஓவராக தடுப்பாட்டம் ஆடுகிறார். டெக்னிக்கலாக அவர் சரி என்பதை நிரூபிக்கும் விதமாக இப்படி ஆடுகிறார். க்ரீஸில் ரொம்ப நேரம் நிற்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கம் என்றால், அதை செக்யூரிட்டியே போதுமே.. யார் ரன் அடிப்பது?

கண்டபடி அடித்து ஆட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அதேவேளையில், பல சதங்களை அடித்துள்ள ரஹானே, ரன்னே அடிக்காமல் தடுப்பாட்டம் ஆடுவது சரியான அணுகுமுறையல்ல. என்னை மாதிரி மிகவும் சாதாரணமான ஒரு வீரர் வெளிநாடுகளில் ஆடும்போது, நின்றால் போதும் என்ற மனநிலையில் ஆடலாம். ஆனால் இவர்களெல்லாம் சாம்பியன்கள். இவர்களே இப்படி ஆடலாமா?

Also Read - இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவர் அறிவிப்பு.. தாதாவின் கேப்டன்சியில் அசத்திய வீரர் தேர்வு

ஒரு பேட்ஸ்மேன் இவ்வளவு மந்தமாக ஆடிவிட்டு அவுட்டாகி சென்றால், அவர் ஆடிய விதத்தை வைத்து, அவருக்கு அடுத்து களத்திற்கு வரும் பேட்ஸ்மேன், பவுலிங் மிகச்சிறப்பாக இருக்கிறது போல என்ற மனநிலையுடன் வருவார். அது அவரது பேட்டிங்கையும் பாதிக்கும். ரஹானே சரியாக ஆடவில்லையென்றால், அவருக்கு சரியான ஆலோசனையை வழங்கி அவரை சரிசெய்ய வேண்டிய ரவி சாஸ்திரியும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும் என்ன செய்துகொண்டிருக்கின்றனர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் சந்தீப் பாட்டீல். 

Also Read - மகளிர் டி20 உலக கோப்பை: முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி