IPL Mini Auction 2023: ஐபிஎல் வரலாற்றில் உச்சபட்ச தொகைக்கு விலைபோன சாம் கரன்..! வரலாற்று சாதனை
ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்தில் சாம் கரனை ரூ.18.5 கோடிக்கு எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வீரர் என்ற சாதனையை சாம் கரன் படைத்தார்.
ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் கொச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த ஏலத்தில் முதல் வீரராக ஏலம் விடப்பட்ட கேன் வில்லியம்சன் மீது எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. ரூ.2 கோடி என்ற அடிப்படை விலைக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை எடுத்தது.
அடுத்ததாக இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி ப்ரூக்கை ரூ.13.25 கோடிக்கும், மயன்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கும் சன்ரைசர்ஸ் அணி எடுத்தது. சிஎஸ்கே அணி ரூ.50 லட்சத்திற்கு அஜிங்க்யா ரஹானேவை எடுத்தது.
டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்று இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த சாம் கரனுக்கு, எதிர்பார்த்ததை போலவே பெரிய கிராக்கி இருந்தது. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் சாம் கரனை எடுக்க ஆர்வம் காட்டின.
அதிரடியான பேட்டிங், அபாரமான டெத் பவுலிங் என அனைத்துவகையிலும் அணிக்கு பங்களிப்பு செய்யக்கூடிய ஆல்ரவுண்டர் சாம் கரன் மீது அணிகள் அதிக ஆர்வம் காட்ட, ரூ.20.55 கோடியை மட்டுமே கையிருப்பில் வைத்திருந்த சிஎஸ்கே அணி ஒரு கட்டத்தில் பின் வாங்கியது. சாம் கரனை எந்த விலை கொடுத்தேனும் எடுத்தே தீர வேண்டும் என்ற உறுதியில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.5 கோடி என்ற ஐபிஎல் வரலாற்றின் உச்சபட்ச தொகைக்கு அவரை ஏலத்தில் எடுத்தது.
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு விலை போன வீரர் என்ற சாதனையை படைத்தார் சாம் கரன். இதற்கு முன், கிறிஸ் மோரிஸை கடந்த சீசனுக்கான ஏலத்தில் ராஜஸ்தான் அணி ரூ.16.25 கோடிக்கு எடுத்ததே உச்சபட்ச விலையாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்தார் சாம் கரன்.