Asianet News TamilAsianet News Tamil

Ajinkya Rahane: சபாஷ்.. சரியா சொன்னீங்க கோலி; கேப்டன்னா இப்படித்தான் இருக்கணும்! கோலிக்கு சல்மான் பட் புகழாரம்

அஜிங்க்யா ரஹானே விஷயத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியின் நிலைப்பாட்டையும், அவரது கருத்தையும் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார் சல்மான் பட்.
 

Salman Butt praises India test captain Virat Kohli for his statement on Ajinkya Rahane
Author
Pakistan, First Published Dec 7, 2021, 4:01 PM IST

இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர் அஜிங்க்யா ரஹானே. டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்துவரும் ரஹானே, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும் திகழ்ந்தார்.

இந்திய அணிக்காக 78 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அஜிங்க்யா ரஹானே, 12 சதங்கள் மற்றும் 24 அரைசதங்களுடன் 4756 ரன்களை குவித்துள்ளார். விராட் கோலி ஆடாத போட்டிகளில் கேப்டனாக இருந்து இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார்.

2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், முதல் டெஸ்ட்டில் மட்டும் ஆடிவிட்டு விராட் கோலி இந்தியா திரும்பிவிட, அந்த தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி தொடரை வென்றவர் ரஹானே.

ஆனால் அண்மைக்காலமாக படுமோசமாக பேட்டிங் ஆடிவந்த அஜிங்க்யா ரஹானே மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. கடைசி 20 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ரஹானே அடித்த ரன்கள்: 4, 37, 24, 1, 0, 67, 10, 7, 27, 49, 15, 5, 1, 61, 18, 10, 14, 0, 35, 4.

ரஹானே கடைசி 20 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் வெறும் இரண்டே அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். அதையும் பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டிலேயே அவரை சேர்க்க வேண்டாம் என்ற கருத்து இருந்தது. ஆனால் கோலி ஆடாததால், அவர் தான் கேப்டன்சி செய்ய வேண்டும் என்பதால், அவர் ஆடவைக்கப்பட்டார். ஆனால் அந்த போட்டியிலும் 35 மற்றும் 4 ரன்கள் மட்டுமே அடித்தார்.

அவர் சொதப்பிய அதேவேளையில், ஷ்ரேயாஸ் ஐயர் அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அறிமுக டெஸ்ட்டிலேயே சதமும் அரைசதமும் அடித்தார். இன்னும் ஹனுமா விஹாரி இருக்கிறார். அவரும் வந்தால் டெஸ்ட் அணியில் வீரர்களுக்கு இடையேயான போட்டி மிகக்கடுமையாக உள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலேயே ரஹானே நீக்கப்பட்டார். எனவே அப்படியே இந்திய அணியிலிருந்து ஒட்டுமொத்தமாக ரஹானே ஓரங்கட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே ரஹானே மொத்தமாக ஓரங்கட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஹானே தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து கேப்டன் விராட் கோலி பேசியிருந்தார்.

இந்திய டெஸ்ட் அணியில் ரஹானேவின் எதிர்காலம் குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, ரஹானேவின் ஃபார்மை நான் ஜட்ஜ் செய்ய முடியாது. நான் மட்டுமல்ல; யாருமே ஜட்ஜ் செய்யமுடியாது. ஒரு வீரர் எந்த விஷயத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.  கடந்த காலங்களில் இக்கட்டான சூழல்களில் இந்திய அணிக்கு கைகொடுத்த வீரர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். 

ஒரு வீரர் மீது அழுத்தம் அதிகரித்துவிட்டால், உடனே அணியில் அவரது இடம் குறித்து விவாதிக்கப்படுகிறது. நன்றாக ஆடியபோது, ஒரு வீரரை தூக்கி கொண்டாடுபவர்கள், அடுத்த 2 மாதங்களில் அவர் சரியாக ஆடாதபோது அணியிலிருந்து தூக்க வேண்டும் என்கிறார்கள். வெளியில் இருந்து பேசுபவர்களின் கருத்துகளுக்கு ஏற்ப நாங்கள் ரியாக்ட் செய்யமுடியாது. ஒரு வீரர் எவ்வளவு உழைக்கிறார் என்பது எங்களுக்குத்தான் தெரியும். ரஹானேவோ அல்லது வேறு வீரரோ, யாராக இருந்தாலும், அணியின் ஆதரவு அவர்களுக்கு இருக்கும் என்று கோலி கூறியிருந்தார்.

ரஹானே விஷயத்தில், அவருக்கு ஆதரவாக கோலி பேசியதை வெகுவாக பாராட்டியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட்.

இதுகுறித்து பேசியுள்ள சல்மான் பட், விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி வெற்றிகரமான அணியாக திகழ, கோலி அவரது அணி வீரர்களுக்கு அளிக்கும் ஆதரவு தான் முக்கிய காரணம். ஒரு வீரருக்கு தேவையான நேரத்தில் அவருக்கு ஆதரவளிக்கிறார் கோலி. கோலி மட்டுமல்ல; உலகின் சிறந்த கேப்டன்கள் பலரும், அணிக்காக சிறந்த பங்காற்றிய வீரர்களுக்கு அவர்களது மோசமான காலக்கட்டத்தில் ஆதரவாக இருப்பார்கள். சிறந்த வீரர்களுக்கு அவர்களது மோசமான காலக்கட்டத்தில் ஒரு கேப்டன் அளிக்கும் ஆதரவும், வைக்கும் நம்பிக்கையும் தான், அந்த வீரர் மிக வலுவாக கம்பேக் கொடுக்க உதவும்.

ரஹானே இந்திய அணிக்காக சிறந்த பங்காற்றியிருக்கிறார். அவர் இந்திய அணியின் துணை கேப்டன். கோலி ஆடாத ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அணியை வழிநடத்தி தொடரை வென்றிருக்கிறார். ஏற்கனவே தங்களை நிரூபித்த வீரர்களுக்கு ஆதரவாக கேப்டன் இருந்தால் தான், அதற்கேற்ப அந்த வீரரும் சிறப்பாக ஆடுவார். தனது வீரர்களுக்கு கோலி அளிக்கும் ஆதரவால் தான் அவர் வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார் என்று கோலியை புகழ்ந்து பேசியுள்ளார் சல்மான் பட்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios