Sai Kishore: இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் கலக்கிய தமிழக வீரர் சாய் கிஷோர் பவுலிங்கில் அசத்தினார். அவரை சுப்மன் கில் முன்பு எதற்காக பெஞ்சில் அமர வைத்தார் என பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட்டில் திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் பல வீரர்கள் வெளியே அமரவைக்கப்படுகிறார்கள். அந்தப் பட்டியலில் இருக்கும் ஒரு முக்கிய வீரர்தான் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர்.

சாய் கிஷோர் கலக்கல்

ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்தும், பல போட்டிகளில் ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்திருந்தார். ஆனால், இப்போது இங்கிலாந்து மண்ணில் தனது பந்துவீச்சால் மிரட்டியிருக்கிறார். கவுன்ட்டி கிரிக்கெட்டில் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த சாய் கிஷோர், வெறும் 20 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை அள்ளி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் சாய் கிஷோரின் சுழல் புயல்

தற்போது இங்கிலாந்தில் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் 2 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் க்ளௌசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடும் சாய் கிஷோர், டெர்பிஷைர் அணியின் இரண்டாவது இன்னிங்ஸை மொத்தமாக சரித்தார். 319 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி ஆடிய டெர்பிஷைர் அணியால், சாய் கிஷோரின் சுழலை சமாளிக்கவே முடியவில்லை.

ரூட் க்ளியர்! துலீப் டிராபியில் மாஸ் சதம்... இந்திய டெஸ்ட் அணிக்கு 'கம்பேக்' கொடுக்கிறாரா இஷான் கிஷன்?

மேஜிக் ஸ்பெல்

சாய் கிஷோர் தனது அபாரமான பந்துவீச்சில் 'W,W,W,W,W' என அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெறும் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவருடைய அனல் பறக்கும் பந்துவீச்சால், டெர்பிஷைர் அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், க்ளௌசெஸ்டர்ஷைர் அணி 213 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது.

போட்டியின் நாயகன்

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சாய் கிஷோர், மொத்தமாக 79 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சாய் கிஷோரின் இந்த சிறப்பான ஆட்டம், இந்திய அணி தேர்வாளர்களுக்கும், கேப்டன் கில்லுக்கும் அவர் அனுப்பிய ஒரு செய்தியாகவே பார்க்கப்படுகிறது.

2023-24 ரஞ்சி டிராபி தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிய சாய் கிஷோர், 53 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயார் என்பதை நிரூபித்திருந்தார். ஐபிஎல் தொடரிலும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாகவே செயல்பட்டார். இதுவரை 28 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனாலும், அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

வைபவ் சூர்யவன்ஷியை சீண்டிய திலக் வர்மா! களத்தில் பெரும் மோதல்! வைரலாகும் வீடியோ!

இங்கிலாந்தில் கலக்கும் மற்ற இந்திய வீரர்கள்

தற்போது கவுன்ட்டி கிரிக்கெட்டில் சாய் கிஷோரைத் தவிர பல இந்திய வீரர்களும் விளையாடி வருகின்றனர். யுஸ்வேந்திர சாஹல், மானவ் சுதர், குல்தீப் யாதவ், அகிப் நபி, ராகுல் சாஹர், ஜெய்தேவ் உனத்கட் மற்றும் மயங்க் அகர்வால் போன்றோர் இங்கிலாந்து களத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

நார்த்தாம்டன்ஷைர் அணிக்காக ஆடும் சாஹல், ஒரு போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் உட்பட மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல, டர்ஹாம் அணிக்காக ஆடும் கர்நாடக வீரர் மயங்க் அகர்வால், ஒரு போட்டியில் 36 மற்றும் 48 ரன்கள் எடுத்து, தனது அணியின் 153 ரன்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். உள்ளூர் போட்டிகள் மற்றும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் தொடர்ந்து விக்கெட் வேட்டை நடத்தி வரும் சாய் கிஷோர், விரைவில் இந்திய அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.