- Home
- Sports
- Sports Cricket
- IND vs SL: குல்தீப் யாதவை புறக்கணிக்கும் சுப்மன் கில்.. 2வது டெஸ்ட்டில் நீக்கம்? கம்பீரின் பதில் இதோ!
IND vs SL: குல்தீப் யாதவை புறக்கணிக்கும் சுப்மன் கில்.. 2வது டெஸ்ட்டில் நீக்கம்? கம்பீரின் பதில் இதோ!
IND vs SL: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கேப்டன் சுப்மன் கில் குல்தீப் யாதவை புறக்கணித்தார். 2வது டெஸ்ட்டில் குல்தீப் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு கெளதம் கம்பீர் பதில் அளித்துள்ளார்.

குல்தீப் யாதவ் திறமையை அலட்சியப்படுத்தும் சுப்மன் கில்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு கேப்டன் சுப்மன் கில் நீண்ட நேரம் பந்துவீச வாய்ப்பு கொடுக்காததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்சில் மனவ் சுதர் 10 விக்கெட்டுகளையும், அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா சில முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆனால், குல்தீப் யாதவுக்கு ஒரே ஒரு விக்கெட் மட்டுமே கிடைத்தது.
கேப்டன் சுப்மன் கில் மீது விமர்சனம்
சுதரும், ஜடேஜாவும் சுமார் 44 ஓவர்கள் வரை பந்துவீசிய நிலையில், குல்தீப்புக்கு இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து வெறும் 25 ஓவர்களே கொடுக்கப்பட்டது. இந்தப் போட்டியில் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போதிலும் வெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் மனவ் சுதர் மீது நம்பிக்கை வைத்திருக்கும் கேப்டன் சுப்மன் கில், பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு மேட்ச் வின்னராக திகழந்து வரும் குல்தீப் யாதவ் மீது நம்பிக்கை இழந்தது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
சுப்மன் கில் செய்தது தவறு
இது குறித்து பேசிய முன்னாள் வீரர் முகமது கைப், ''குல்தீப் யாதவை பயன்படுத்திய விதத்தைப் பார்த்தாலே, சுப்மன் கில்லுக்கு குல்தீப் மீது போதுமான நம்பிக்கை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. என் பார்வையில், குல்தீப் போன்ற ஒரு தனித்துவமான பந்துவீச்சாளர் அடிக்கடி கிடைக்க மாட்டார்.
வரலாற்றில் ஒன்று அல்லது இரண்டு முறைதான் இப்படிப்பட்டவர்கள் வருவார்கள். எதிர்காலத்தில் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக சுதர் போன்ற ஒரு வீரர் நமக்குக் கிடைக்கலாம். உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால் அஷ்வினுக்குப் பிறகு வாஷிங்டன் சுந்தர் வந்தது போல. ஆனால் குல்தீப் ஒரு தனித்துவமான பரிசு'' என்று கூறியிருந்தார்.
"நீங்கள் ஒரு பந்துவீச்சாளருக்கு, குறிப்பாக ஒரு ரிஸ்ட்-ஸ்பின்னருக்கு வாய்ப்பு கொடுக்கும்போது, நீண்ட ஸ்பெல் கொடுக்க வேண்டும். குறுகிய ஸ்பெல்கள் குல்தீப்புக்கு உதவாது. நீண்ட நேரம் பந்துவீசும்போதுதான் தவறுகளைச் சரிசெய்ய வாய்ப்பு கிடைக்கும். ரிதம் கிடைக்கவும் நேரம் தேவை. அந்த வகையில் சுப்மன் கில் அவருக்கு ஆதரவளிக்கவில்லை" என்று முகமது கைப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
2வது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் நீக்கம்?
இதற்கிடையே இந்தியா, இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் நாளை (ஆகஸ்ட் 23) ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் தொடங்க உள்ள நிலையில், குல்தீப் யாதவ் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், இந்த தகவல்களுக்கு பதில் அளித்துள்ள இந்திய அணி பயிற்சியாளர் கெளதம் கம்பீர் குல்தீப் யாதவ் மேல் எங்களுக்கு பெரிய நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கெளதம் கம்பீர் சொன்ன அதிரடி பதில்
இது தொடர்பாக பேசிய கம்பீர், ''குல்தீப் எவ்வளவு திறமையான பந்துவீச்சாளர் என்று எங்களுக்கு நல்லாவே தெரியும். ஒரு ரிஸ்ட் ஸ்பின்னரா, விக்கெட் எடுக்க வேண்டும் என ரொம்ப பதற்றப்பட்டா, கண்ட்ரோல் போயிடும். அதனால் விக்கெட் எடுக்க வேண்டும் என நினைக்கணுமே தவிர, அதுக்காகப் பதற்றப்படக் கூடாது என அவரிடம் சொல்லியிருக்கேன்'' என்றார்.
தொடந்து பேசிய அவர், ''குல்தீப் மேல் எங்களுக்கு பெரிய நம்பிக்கை இருக்கு. அவர் எவ்வளவு வெற்றிகரமான பந்துவீச்சாளர் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஆனாலும், இந்த கண்டிஷனுக்கு எது சிறந்த பந்துவீச்சு கூட்டணியோ, அதைத்தான் தேர்வு செய்வோம்'' என்று கூறியுள்ளார்.

