வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சச்சின், ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர்!
வாரணாசியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்படும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், வாரணாசி வந்த சச்சின், ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் அங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
வாரணாசி ஆன்மீக வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ள நிலையில், தற்போது இது மாநிலத்தின் முக்கியமான விளையாட்டு மையமாக உருவாக உள்ளது. ஆம், இன்று 23 ஆம் தேதி வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்படும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
கிட்டத்தட்ட 31 ஏக்கர் பரப்பரளவில் கட்டப்படும் இந்த மைதானம் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது. டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, ஃப்ளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், விஐபி ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மைதானம் கட்டப்படவுள்ளது.
இந்த நிலையில், இந்த மைதான அடிக்கல் நாட்டு விழாவிற்கு இந்திய பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சச்சின் டெண்டுல்கர், ரவி சாஸ்திரி மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் வாரணாசி வந்துள்ள நிலையில், அங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் இந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்துள்ளார். பிரதமர் மோடியின் வருகையைத் தொடர்ந்து வாரணாசியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
IND vs AUS: 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மொஹாலியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை!