இந்திய பவுலர்களை மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 197 ரன்களும் அடித்தன. 130 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 174 ரன்கள் அடிக்க, 305 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்காவின் கோட்டையான செஞ்சூரியனில் அந்த அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. அதற்கு காரணம் இந்திய அணியின் தரமான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் தான். தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்ல; ஆஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பேன், இங்கிலாந்தின் கோட்டையான லார்ட்ஸ், ஓவல் என அந்தந்த நாடுகளின் கோட்டைகளில் அந்தந்த அணிகளை வீழ்த்தி இந்திய அணி அசத்தியது. அதற்கு காரணம், இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் தான்.
அந்தவகையில், ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான தென்னாப்பிரிக்காவிலும் இந்திய பவுலர்கள் பட்டைய கிளப்பிவருகின்றனர். செஞ்சூரியன் டெஸ்ட் வெற்றியையடுத்து, இந்திய பவுலர்களை சச்சின் டெண்டுல்கர் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், சூப்பர் பவுலிங்.. இந்திய அணியின் இந்த பவுலிங் யூனிட் உலகின் அனைத்து பகுதிகளிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தவல்லவர்கள். இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.. அபார வெற்றி இது என்று சச்சின் பாராட்டியுள்ளார்.
