கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 750ஐ நெருங்கிவிட்டது. கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், இந்தியாவில் இன்னும் சமூக தொற்றாக அது பரவவில்லை. அதற்குள்ளாக ஊரடங்கு அமல்படுத்தி, மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதால், சமூக பரவல் தடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தொழில் முனைவோர், மாத ஊதிய ஊழியர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழை, எளிய, ஆதரவற்ற மக்களுக்கு எந்தவித சிரமுமின்றி உணவு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. அதேபோல வருவாய் இழப்பு ஏற்பட்டோரை கருத்தில் கொண்டு நிதி சார்ந்த திட்டங்களும் அறிவிக்கப்பட்டுவருகின்றன. 

இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து உதவும் விதமாக பல பிரபலங்கள் நிதியுதவி அளித்துவருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி, ரூ.50 லட்சம் மதிப்பிலான அரிசியை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கியுள்ளார். பேட்மிண்ட்டன் வீராங்கனை பிவி சிந்து ரூ.5 லட்சத்தை ஆந்திர மாநில முதல்வர் நிதிக்கு வழங்கியுள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்த 50 லட்சத்தை இரண்டாக பிரித்து, ரூ.25 லட்சத்தை பிரதமர் நிதிக்கும் ரூ.25 லட்சத்தை மகாராஷ்டிரா முதல்வர் நிதிக்கும் வழங்கியுள்ளார்.

அதேபோல யூசுஃப் பதான் - இர்ஃபான் பதான் சகோதரர்கள் தங்களது சொந்த ஊரான பரோடாவில் 4000 முகக்கவசங்களை இலவசமாக வழங்கியுள்ளனர்.