ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற கையோடு இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் இந்திய அணி ஆடுகிறது. 

டி20 தொடர் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கு பின்னர் ஆடிய ஒரு தொடரை கூட இழக்காத இந்திய அணி, வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ்(வெஸ்ட் இண்டீஸில் நடந்த தொடர்), வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்(இந்தியாவில் நடந்த தொடர்), இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக அனைத்து தொடர்களையும் வென்றுள்ள இந்திய அணி, நியூசிலாந்தை அதன் மண்ணில் வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. 

இந்திய அணி, எந்த எதிரணியை வீழ்த்த வேண்டுமென்றாலும், ரோஹித் சர்மா - விராட் கோலி ஆகிய இருவரில் ஒருவர் பெரிய இன்னிங்ஸ் ஆடியாக வேண்டும். இவர்கள் இருவரையும் தான் இந்திய அணி அதிகமாக சார்ந்திருக்கிறது. எனவே மேட்ச் வின்னர்களான இவர்கள் இருவரும் நன்றாக ஆடியாக வேண்டும்.

இந்நிலையில், நியூசிலாந்தில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா எதிர்கொள்ள வாய்ப்பிருக்கும் சவாலை இப்போதே முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கூறியுள்ளார் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். இதுகுறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர், வெவ்வேறு கண்டிஷன்களில் தொடக்க வீரராக இறங்கி ஆடுவது சவாலான விஷயம்.

ஆனால் ரோஹித் சர்மா நியூசிலாந்தில் இதற்கு முன்னர் ஆடிய அனுபவம் பெற்றிருப்பதால், அவருக்கு நியூசிலாந்து கண்டிஷன் நன்றாக தெரியும். அதனால் பிரச்னையில்லை. ஆனால் வேறொரு சவால் இருக்கிறது. நியூசிலாந்து ஆடுகள தயாரிப்பு ரோஹித்துக்கு சவாலாக இருக்கலாம். பசுமையான ஆடுகளத்தை தயாரித்தால், அது ரோஹித்துக்கு சவாலாக இருக்கக்கூடும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.