சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக திகழ்கிறது. உலகம் முழுதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19 ஆயிரம் பேரை காவு வாங்கியுள்ளது கொரோனா.

கொரோனாவின் பிறப்பிடம் சீனாவாக இருந்தாலும், சீனாவை இத்தாலியில் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ். இத்தாலி, ஸ்பெய்ன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. 

ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், 130 கோடி மக்கள் தொகையை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், கொரோனாவின் தாக்கம் அந்தளவிற்கு வீரியமாக இல்லை. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதுடன், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சரியான நேரத்தில் ஊரடங்கை பிறப்பித்து, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதுதான் காரணம்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 600ஐ நெருங்கியிருந்தாலும், பொதுச்சமூகத்தில் இன்னும் பரவவில்லை. கொரோனாவிற்கு மருந்து இல்லாததால், தனிமைப்படுத்தலே அதிலிருந்து தப்பிப்பதற்கான வழி என்பதால், நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் பிரதமர் மோடி. ஆனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இல்லை. சிறிய மளிகை கடைகள், காய்கறி கடைகள், மெடிக்கல் ஆகியவை இயங்கும். ஒவ்வொருவரும் சமூக விலகலை கடைபிடித்தாலே போதும். கொரோனாவிலிருந்து விடுபடலாம் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. 

எனவே ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கை பிறப்பித்துள்ளது மத்திய அரசு. அதனால் நாடே ஸ்தம்பித்துள்ளது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். வீட்டில் இருந்து வேலை பார்க்கக்கூடியவர்களை தவிர மற்றவர்கள் வீட்டில் சும்மா இருக்கும் நிலை உருவாகியுள்ளது. 

மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், சிலர் பொறுப்பின்றி சாலைகளில் திரிகின்றனர். எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ஆனால் மக்கள் பொறுப்புணர்ந்து வீட்டில் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை. 

இந்நிலையில், பிரதமர் மோடியின் ஊரடங்கு உத்தரவை பின்பற்றுமாறு சச்சின் டெண்டுல்கர், நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ள டுவீட்டில்,  ஈசியான விஷயங்கள் கூட, அடிக்கடியோ அல்லது தொடர்ச்சியாகவோ செய்யும்போது கஷ்டமாகத்தான் இருக்கும். வீட்டில் முடங்கிக்கிடப்பதும் அப்படித்தான்.. ஆனால் தொடர்ச்சியாக அதை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கான உறுதிப்பாடு கண்டிப்பாக தேவை. 

நமது பிரதமர் மோடி ஜி, நம்மை 21 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஈசியான டாஸ்க்கை நாம் செய்வதன்மூலம், பல மில்லியன் உயிர்களை காக்க முடியும். எனவே கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றுசேர்வோம் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.