தென்னாப்பிரிக்காவில் இந்திய வீரர்கள் எப்படி பேட்டிங் ஆட வேண்டும் என்று லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் அறிவுரை கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 26ம் தேதி செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இரு அணிகளும் வெற்றி வேட்கையுடன் மோதுகின்றன.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ரோஹித் சர்மா காயத்தால் வெளியேறியதால், அவருக்கு பதிலாக பிரியன்க் பன்சால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது துணை கேப்டன் பொறுப்பு கேஎல் ராகுலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்திய டெஸ்ட் அணி:
விராட் கோலி (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), மயன்க் அகர்வால், புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், பிரியன்க் பன்சால்.
இந்த டெஸ்ட் தொடரில், நல்ல ஃபார்மில் இருந்த ரோஹித்தும் ஆடாததால் இந்திய அணிக்கு பெரும் சவாலாகவே இருக்கும். இந்நிலையில், மாஸ்டர் பிளாஸ்டர் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர், தென்னாப்பிரிக்காவில் இந்திய வீரர்கள் எப்படி பேட்டிங் ஆட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்திய வீரர்களுக்கு பேட்டிங் ஆலோசனை கூற சச்சின் டெண்டுல்கரை விட தகுதியான ஒரு நபரை காட்டிவிட முடியாது.
1992, 1996, 2001, 2006 மற்றும் 2010 ஆகிய 5 முறை தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆடியுள்ள சச்சின் டெண்டுல்கர், அங்கு 5 டெஸ்ட் சதங்களை விளாசியுள்ளார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் இந்திய வீரர்கள் எப்படி பேட்டிங் ஆட வேண்டும் என்பதை தனது அனுபவத்திலிருந்து எடுத்துரைத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், ஃப்ரண்ட் ஃபூட் டிஃபென்ஸ் (தடுப்பாட்டம்) மிக முக்கியம் என்பதை நான் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். ஃப்ரண்ட் ஃபூட் டிஃபென்ஸ் தென்னாப்பிரிக்காவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. முதல் 25 ஓவர்கள் ஃப்ரண்ட் ஃபூட்டில் டிஃபென்ஸ் ஆடுவது மிகக்கடினம். உடம்புக்கு வெளியே பேட்டை வீசிவிடவே கூடாது. உடம்புக்கு வெளியே பேட்டை மட்டும் விட்டால், கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாட்டை இழந்துவிடுவீர்கள். எனவே உடம்புக்கு வெளியே பேட்டை மட்டும் விடக்கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தினார்.
இங்கிலாந்தில் ரோஹித் மற்றும் ராகுல் பேட்டிங் ஆடிய விதத்தை சுட்டிக்காட்டிய சச்சின், அவர்கள் இங்கிலாந்தில் காட்டிய பொறுமை தான் அவர்கள் அங்கு சோபித்ததற்கு காரணம் என்றார்.
இங்கிலாந்தில் ரோஹித்தும் ராகுலும் சிறப்பாக ஆடியதற்கு காரணம், உடம்புக்கு வெளியே பேட்டை மட்டும் அவர்கள் விடவேயில்லை; உடம்புடன் ஒட்டியே ஆடினர். அது ஒன்றுதான், முந்தைய இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கும், கடைசி இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கும் இடையேயான பெரிய வித்தியாசம். பேட்டை மட்டும் தனியாக விடாததால் தான், கடைசி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய ஓபனர்கள் வெற்றிகரமாக திகழ்ந்தனர் என்றார் சச்சின் டெண்டுல்கர்.
