உலக கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட்டில் பாரம்பரிய எதிரிகளாக திகழும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். அதிலும் உலக கோப்பை போட்டி என்றால் எப்படி இருக்கும் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்..?

உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஆவலாக பார்ப்பார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவிலான ரசிகர்கள் இந்த போட்டியை எதிர்நோக்கி காத்துள்ளனர். இதுவரை உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. அந்த ரெக்கார்டை பிரேக் பண்ணும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் உள்ளன. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 வலுவான அணிகளை வீழ்த்தியுள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்துவது பாகிஸ்தான் அணிக்கு அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதேநேரத்தில் முடியாத விஷயமும் அல்ல. 

பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் ஆடி ஒரேயொரு வெற்றியுடன் 3 புள்ளிகளை(ஒரு போட்டி கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி) மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. எனவே அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க, வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியை எதிர்கொள்வதால் அந்த அணிக்கு கூடுதல் நெருக்கடி இருக்கிறது. 

எனினும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதீத நம்பிக்கையில் இல்லாமல் எச்சரிக்கையுடன் ஆட வேண்டும் என கங்குலி ஆலோசனை தெரிவித்திருந்த நிலையில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் இந்திய அணிக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், பாகிஸ்தான் அணி எப்போதுமே கணிக்க முடியாத அபாயகரமான அணி. எனவே அவர்களை இந்திய அணி எளிதாக எடைபோட வாய்ப்பில்லை. ஆனாலும் ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும்போதும் நாம் என்ன செய்கிறோம் என்பதில் இந்திய அணி 100 சதவிகிதம் உறுதியாக இருக்க வேண்டும். நன்கு யோசித்து நன்கு திட்டமிட்ட முடிவுகளை எடுப்பது அவசியம் என்று சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.