ஷிகர் தவான் எவ்வளவு பெரிய பிளேயர்.. அவரை இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களே! இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் ராகுல் இணைந்தபின், தவான் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் சபா கரிம்.
இந்திய அணியின் சீனியர் வீர்ர் ஷிகர் தவான். ஒருநாள் மற்றும் டி20 ஆகிய வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்த ஷிகர் தவான், கேஎல் ராகுலின் எழுச்சிக்கு பிறகு டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். ஆனால் ஒருநாள் அணியில் தொடர்ந்து இடம்பெற்று ஆடிவருகிறார்.
ஷிகர் தவான் இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 155 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் ஆடி 10,500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இந்திய அணியின் சீனியர் வீரராக திகழும் ஷிகர் தவான் அவ்வப்போது சில தொடர்களுக்கு தற்காலிக கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு, அதில் சிறப்பாக செயல்பட்டும் இருக்கிறார்.
இதையும் படிங்க - இந்திய அணியில் இருக்கும் அந்த வீரர் மாதிரியான ஒருவர் இல்லாததுதான் பாகிஸ்தானின் மைன்ஸ்! முன்னாள் வீரர் வேதன
அண்மையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை கூட ஷிகர் தவான் கேப்டன்சியில் இந்திய அணி ஜெயித்திருந்தது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் தான் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சென்று வரும் 18, 20, 22 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இந்திய அணி ஆசிய கோப்பையில் ஆடவுள்ளதால், இந்த தொடருக்கான இந்திய அணி ஷிகர் தவான் கேப்டன்சியில் இளம் வீரர்கள் கொண்ட அணியாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் காயத்தால் அவதிப்பட்டு வந்த கேஎல் ராகுல், காயத்திலிருந்து மீண்டு முழு ஃபிட்னெஸுடன் அணிக்கு திரும்பியதையடுத்து, அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டு, கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த தவான் துணை கேப்டனாக மாற்றப்பட்டார்.
இந்நிலையில், ஷிகர் தவான் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான சபா கரிம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க - ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சீனியர் வீரர் புறக்கணிப்பு..! ரிக்கி பாண்டிங் சொல்லும் நியாயமான காரணம்
இதுகுறித்து பேசியுள்ள சபா கரிம், நீண்ட இடைவெளிக்கு பின் அணியில் இணைந்த கேஎல் ராகுல் ஆடுவதுதான் முக்கியமே தவிர, அவருக்கு கேப்டன், துணை கேப்டன் என்ற பொறுப்புகளெல்லாம் முக்கியமல்ல. ஷிகர் தவான் அணியின் சீனியர் வீரர். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறந்த பங்காற்றியவர். அவரை கேப்டனாக நியமித்தால் அவருக்கான முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் கேப்டன்சியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. இளம் வீரர்களை வைத்துக்கொண்டு அந்த தொடரை ஒயிட்வாஷ் செய்து வென்றது இந்திய அணி. தவான் பேட்டிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டார். அவரது கேப்டன்சியில் ஆடிய இளம்வீரர்கள் அவரை முன்மாதிரியான லீடராக பார்க்கின்றனர். அப்படியிருக்கையில், அவரை கேப்டன்சியிலிருந்து நீக்கிவிட்டு கேஎல் ராகுலை கேப்டனாக நியமித்திருக்கக்கூடாது என்று சபா கரிம் கருத்து கூறியுள்ளார்.
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.