விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்து இந்திய அணி தேர்வாளர்களுக்கு கூடுதல் அழுத்தம் போடுகிறார் ருதுராஜ் கெய்க்வாட். 

உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் கடந்த 8ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் அதீத அபாரமாக விளையாடிவருகிறார். ஐபிஎல்லில் மிகச்சிறப்பாக ஆடி அதிகமான ரன்களை குவித்து ஆரஞ்ச் கேப்பை வென்ற ருதுராஜ் கெய்க்வாட், அதே ஃபார்மை விஜய் ஹசாரே தொடரிலும் தொடர்ந்துவருகிறார்.

முதல் போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிராக 136 ரன்களை குவித்து மகாராஷ்டிராவை வெற்றி பெற செய்த ருதுராஜ், 2வது போட்டியில் சத்தீஸ்கர் அணிக்கு எதிராக 154 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று ஆட்டத்தை முடித்து கொடுத்தார்.

இன்று கேரள அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் அபாரமாக ஆடி சதமடித்த ருதுராஜ், 124 ரன்களை குவித்தார். ஆனால் இந்த போட்டியில் கேரள அணி வெற்றி பெற்றுவிட்டது. ருதுராஜ் சதமடித்தும், மகாராஷ்டிரா அணி வெற்றி பெறவில்லை.

ருதுராஜ் கெய்க்வாட்டின் சிறப்பான ஃபார்ம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்திய டி20 அணியில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட ருதுராஜ் கெய்க்வாட், இந்திய ஒருநாள் அணியிலும் தன்னை புறக்கணிக்கமுடியாதபடி, தொடர் சதங்களை விளாசிவருகிறார். இதே ஃபார்மை அவர் தொடர்ந்தால், அவரை தேர்வாளர்களால் கண்டிப்பாக புறக்கணிக்கமுடியாது.

ஏற்கனவே இந்திய அணியில் இடம்பெற வீரர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். யாரை எடுப்பது, யாரை புறக்கணிப்பது என்று தெரியாமல் தேர்வாளர்கள் திக்குமுக்காடிவருகின்றனர். சீனியர் டாப் ஆர்டர் வீரர் ஷிகர் தவானுக்கே இந்திய அணியில் இடம் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணி தேர்வாளர்களுக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் இனிய தலைவலியாக மாறியுள்ளார்.