நியூசிலாந்து அணியின் சீனியர் வீரர் ரோஸ் டெய்லர். 2006ம் ஆண்டு நியூசிலாந்து அணியில் அறிமுகமான ரோஸ் டெய்லர், 14 ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்காக சிறந்த பங்காற்றிவருகிறார். மிடில் ஆர்டரில் 14 ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்கு வலு சேர்க்கிறார். 

இதுவரை 101 டெஸ்ட், 231 ஒருநாள் மற்றும் 100 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் டெய்லர். மூன்றுவிதமான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் ஆடிய வீரர் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் டெய்லர் தான். 

கடந்த ஆண்டின் சிறந்த நியூசிலாந்து கிரிக்கெட்டராக தேர்வு செய்யப்பட்ட டெய்லருக்கு சர் ரிச்சர்ட் ஹாட்லி விருது வழங்கப்பட்டது. மூன்றாவது முறையாக, ஓராண்டின் சிறந்த கிரிக்கெட்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் டெய்லர். டெய்லர் கடந்த ஆண்டில் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் சிறப்பான பங்காற்றியுள்ளார். 

கடந்த ஆண்டில் சர்வதேச கிரிக்கெடில் 2 சதங்கள் மற்றும் 9 அரைசங்களுடன் 1389 ரன்களை குவித்தார். வில்லியம்சனை விட டெய்லர் தான் அதிக ரன்களை குவித்திருந்தார். உலக கோப்பையில் நியூசிலாந்து அணி இறுதி போட்டியில் பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் தான் தோற்றது. விதிப்படி அது தோல்விதான் என்றாலும் தார்மீக ரீதியில் அது தோல்வியல்ல. அந்த உலக கோப்பையில் டெய்லர் சிறப்பாக ஆடி நியூசிலாந்து அணி இறுதி போட்டிவரை செல்லவும், இறுதி போட்டியில் கிட்டத்தட்ட கோப்பையை வெல்லுமளவிற்கு அணி சென்றதற்கும் முக்கிய பங்காற்றினார். 

இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றிராத நியூசிலாந்து அணி, 2015 மற்றும் 2019 ஆகிய இரண்டு உலக கோப்பை தொடர்களிலுமே இறுதி போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது. 

இந்நிலையில், கடந்த ஆண்டின் சிறந்த வீரர் என்ற விருதை வென்ற டெய்லர், 2023 உலக கோப்பையில் கண்டிப்பாக ஆடுவேன் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய டெய்லர், கெரியரில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். கடந்த ஆண்டு எனக்கு சிறப்பானதாக அமைந்தது. உலக கோப்பை, பாக்ஸிங் டே டெஸ்ட் என அருமையாக இருந்தது. 

கிரிக்கெட் மீதான ஆர்வமும் ரன் குவிக்கும் தாகமும் மனவலிமையும் எனக்கு இருக்கிறது. எனவே அவையனைத்தும் எனக்கு இருக்கும் வரை நான் கிரிக்கெட் ஆடுவேன். 2023 உலக கோப்பை நடக்கும்போது, எனக்கு 38-39 வயது ஆகும். ஆனால் அந்த உலக கோப்பையில் கண்டிப்பாக ஆடுவேன். மனவலிமையும் ஆர்வமும் இருக்கும் வரை வயது வெறும் நம்பர் தான் என்றார் டெய்லர்.