Asianet News TamilAsianet News Tamil

என்னாலலாம் முடியாதுப்பா..! ஒதுங்கிய ரோஹித்.. கேப்டன் ரஹானே..!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்படுவதால், விராட் கோலி ஆடாத முதல் டெஸ்ட்டில் ரஹானே தான் கேப்டன்சி செய்வார் என்று தெரிகிறது.
 

rohit sharma to skip test series against new zealand and so ajinkya rahane may lead test team
Author
Dubai - United Arab Emirates, First Published Nov 11, 2021, 7:31 PM IST

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய அணி தொடரை விட்டு வெளியேறியது. நியூசிலாந்து அணி ஃபைனலுக்கு முன்னேறிய நிலையில், பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான 2வது அரையிறுதி போட்டி இன்று துபாயில் நடக்கிறது. இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி வரும் 14ம் தேதி நடக்கும் ஃபைனலில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.

14ம் தேதி ஃபைனலை ஆடிவிட்டு அங்கிருந்து நேரடியாக இந்தியாவிற்கு வரும் நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

வரும் 17, 19, 21 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும், அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன. டி20 உலக கோப்பையுடன் விராட் கோலி, இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ரோஹித் சர்மா இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். புதிய தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இந்திய அணி முதல்முறையாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடுகிறது.

தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கும் மேலாக இந்திய வீரர்கள் சிலர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவருகின்றனர். அதனால் சிறிது ஓய்வு தேவை என்பதற்காக விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி நியூசி.,க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் ஆடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். 

டெஸ்ட் தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், ரிஷப் பண்ட் ஆகிய வீரர்களுக்கும் ஓய்வளிக்கப்படுகிறது. இந்நிலையில், கோலி ஆடாத முதல் டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் சர்மா - அஜிங்க்யா ரஹானே ஆகிய இருவரில் யாரை கேப்டனாக நியமிப்பது என்ற குழப்பத்தில் பிசிசிஐ உள்ளதாக தகவல் வெளியானது.

அண்மைக்காலமாக அவரது பேட்டிங் ஃபார்ம் சரியில்லை. அவர் அணியில் தேவையில்லை; அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி அல்லது வேறு வீரரை சேர்க்கலாம் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. அதேவேளையில், டி20 அணியின் புதிய கேப்டனான ரோஹித் சர்மா, கடந்த 2 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார். எனவே டெஸ்ட் அணி கேப்டனாக ரோஹித் சர்மா -  அஜிங்க்யா ரஹானே ஆகிய இருவரில் யாரை நியமிப்பது என்பதில் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று தேர்வாளர்கள் டெஸ்ட் அணி தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தியபோது, ரோஹித் சர்மாவின் பணிச்சுமையை கருத்தில்கொண்டு அவருக்கு டெஸ்ட் தொடரில் ஓய்வளிக்க முடிவு செய்திருப்பதாகவும், அதனால் ரஹானே தான் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்துவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் சர்மா ஓய்வு தேவை என்று கேட்டதால், அவர் டெஸ்ட் தொடரில் ஆடாததால் தான் ரஹானே கேப்டனாக செயல்படவுள்ளார். ஒருவேளை ரோஹித் ஆடியிருந்தால், முதல் டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கக்கூடும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios