கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகமாகிவரும் நிலையில், சமூக பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் அனைத்து சமூக பொருளாதார செயல்பாடுகளும் முற்றிலுமாக முடங்கியுள்ளன. நாட்டு மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724ஆகவும் பலியானோரின் எண்ணிக்கை 18ஆகவும் உள்ளது. கொரோனாவை அழிக்கும் நோக்கில், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்துவருகின்றனர்.

கொரோனா எதிரொலியாக கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜூலை மாதம் தொடங்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய மற்றும் அதிகமான பணம் புழங்கக்கூடிய ஐபிஎல் தொடரின் 13வது சீசன் வரும் 29ம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில், கொரோனா எதிரொலியால், ஏப்ரல் 15ம் தேதி வரை, இந்த மாத தொடக்கத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. 

ஐபிஎல் நடத்துவதை விட, நாட்டு மக்களின் பாதுகாப்பும் நலனுமே முக்கியம் என பிசிசிஐ-யும் ஐபிஎல் அணிகளும் தெரிவித்துவிட்டன. எனவே இப்போதைக்கு ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருப்பது தான் லேட்டஸ்ட் அப்டேட். ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. 

இந்தியாவில் கொரோனா சமூகப்பரவலாக இல்லையென்றாலும், கொரோனாவிலிருந்து விரைவில் மீண்டாலும் அதன் தாக்கம் அடுத்த சில மாதங்களுக்கு இருக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல் கொரோனாவிலிருந்து மீண்டபின், ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடும் ஐபிஎல்லை நடத்துவதற்கான வாய்ப்பு குறைவுதான். ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் இப்போதைக்கு வெளிநாட்டினர் யாரும் இந்தியாவிற்கு வரமுடியாது. இந்நிலையில், ஐபிஎல் நடப்பதே சந்தேகமாகியிருந்தாலும், ஐபிஎல் நடக்கும் என ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீட்டர்சனுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் உரையாடல் செய்தார் ரோஹித் சர்மா. அப்போது, இந்த ஆண்டு ஐபிஎல் நடக்குமா என்று ரோஹித்திடம் கெவின் பீட்டர்சன் கேட்டார். அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா,  கொரோனாவிலிருந்து மீண்டு நிலைமை சரியான பின்னர், ஐபிஎல் நடக்க வாய்ப்புள்ளது. யாருக்கு தெரியும்..? என்று தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மாவின் நம்பிக்கை அதீதமானது என்றுதான் சொல்ல வேண்டும். 13வது சீசனின் முதல் போட்டியே ரோஹித்தின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸுக்கும் தோனி தலைமையிலான சிஎஸ்கேவிற்கும் இடையே தான் நடப்பதாக இருந்தது.