IND vs AUS: இந்திய அணியின் தோல்விக்கு இவங்கதான் காரணம்..! கேப்டன் ரோஹித் சர்மா பகிரங்க குற்றச்சாட்டு
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கான காரணத்தை கூறியுள்ளார் கேப்டன் ரோஹித் சர்மா.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில், கடைசி போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் அடித்தார். டிராவிஸ் ஹெட் (33), டேவிட் வார்னர்(23), லபுஷேன்(28), அலெக்ஸ் கேரி(38), ஸ்டோய்னிஸ்(25), ஷான் அபாட்(26) ஆகியோரும் பங்களிப்பு செய்ய அந்த அணி 269 ரன்கள் அடித்தது.
270 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 17 பந்தில் 30 ரன்கள் அடித்தார். ஷுப்மன் கில்லும் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த கோலி 54 ரன்களுக்கும், கேஎல் ராகுல் 32 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஹர்திக் பாண்டியா மட்டுமே 40 ரன்கள் அடித்தார். அக்ஸர் படேல்(2), சூர்யகுமார் யாதவ்(0), ஜடேஜ(18), குல்தீப் யாதவ்(6), ஷமி(14) என அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய மண்ணில் 2019லிருந்து தொடர்ச்சியாக 7 ஒருநாள் தொடர்களை வென்ற இந்திய அணி, 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் தொடரில் தோல்வியடைந்துள்ளது. கடைசியாக 2019ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தான் இந்திய மண்ணில் தோல்வியை தழுவியது. அதன்பின்னர் சொந்த மண்ணில் தோல்வியையே சந்தித்திராத இந்திய அணி, மீண்டும் ஆஸ்திரேலியாவிடமே தோற்றது.
ஒருநாள் உலக கோப்பை இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவிருக்கும் நிலையில், அதற்காக தீவிரமாக தயாராகிவரும் இந்த வேளையில், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை எந்த அணி வெல்லும்..? வாசிம் அக்ரம் அதிரடி ஆருடம்
கடைசி போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய ரோஹித் சர்மா, இது மிகப்பெரிய இலக்காக நான் பார்க்கவில்லை. இந்த மாதிரி இலக்கை விரட்டும்போது பார்ட்னர்ஷிப் அவசியம். ஆனால் நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கோட்டைவிட்டோம். இந்த மாதிரி பிட்ச்களில் ஆடியே வளர்ந்த நாங்கள், அதை அப்ளை செய்து ஆடியிருக்க வேண்டியது அவசியம். அதை செய்ய தவறிவிட்டோம். யாராவது ஒருவர் நிலைத்து ஆடி கடைசிவரை நின்று போட்டியை முடித்து கொடுத்திருக்க வேண்டும். அது அமையாமல் போனதுதான் தோல்விக்கு காரணம் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.