இந்தியா  - நியூசிலாந்து இடையேயான டி20 தொடரில் இந்திய அணி முதல் 4 போட்டிகளிலும் வென்று தொடரை வென்றுவிட்ட நிலையில் கடைசி போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 163 ரன்கள் அடித்தது. இந்த போட்டியில் கேஎல் ராகுலும் சஞ்சு சாம்சனும் தொடக்க வீரர்களாக இறங்கினர். ஆனால் சாம்சன் சரியாக ஆடாமல் 2 ரன்னில் வெளியேறினார். 

மூன்றாம் வரிசையில் இறங்கிய ரோஹித் சர்மா, ஆரம்பத்தில் நிதானமாக ஆடினார். ராகுல் அடித்து ஆடி ஸ்கோர் செய்தார். களத்தில் நிலைத்த பின்னர் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா, 10வது ஓவரில் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்தார். அடுத்த ஓவரிலும் சிக்ஸர் விளாசினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். இது டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் 25வது அரைசதம்.

இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். விராட் கோலி 24 அரைசதங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். மார்டின் கப்டிலும் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங்கும் 17 அரைசதங்களுடன் மூன்றாமிடத்திலும் 16 அரைசதங்களுடன் வார்னர் நான்காமிடத்திலும் உள்ளனர். 

இந்த போட்டியில் 60 ரன்கள் அடித்த ரோஹித் சர்மா, காலில் ஏற்பட்ட காயத்தால் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் சரியாக ஷாட் கனெக்ட் ஆகாமல் திணறியதால் பந்துக்கு நிகரான ரன் மட்டுமே அடித்ததால் இந்திய அணி வெறும் 163 ரன்களை மட்டுமே அடிக்க நேர்ந்தது. 

Also Read - ஹர்திக் பாண்டியாவுக்கு டீம்ல கண்டிப்பா இடம் இல்ல.. உறுதி செய்த பிசிசிஐ

இந்த தொடரில் சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 10,000 ரன்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் 14000 ரன்கள் ஆகிய மைல்கற்களையும் எட்டியது குறிப்பிடத்தக்கது.