ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிவரும் ஹர்திக் பாண்டியா, ஐபிஎல்லின் மூலமாகத்தான் அடையாளம் காணப்பட்டு இந்திய அணியில் அறிமுகமானார். பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்துவிதத்திலும் மிகச்சிறந்த பங்களிப்பை அணிக்கு வழங்கியதன் விளைவாக, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்றுவிதமான இந்திய அணிகளிலும் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்து ஆடிவந்தார். 

உலக கோப்பையில் ஆடிய ஹர்திக் பாண்டியா, அதன்பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் ஆடியதுதான் கடைசி. அவருக்கு கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பையில் முதுகுப்பகுதியில் அடிபட்டது. அதனால் நீண்ட ஓய்வில் இருந்து சிகிச்சை பெற்ற ஹர்திக் பாண்டியா, அதன்பின்னர் காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இடைக்கால தடை பெற்றார். அதிலிருந்தும் மீண்டுவந்த ஹர்திக் பாண்டிய, 2019 ஐபிஎல்லிலும் அதைத்தொடர்ந்து உலக கோப்பையிலும் ஆடினார். 

உலக கோப்பைக்கு பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் மட்டுமே ஆடிய ஹர்திக் பாண்டியாவிற்கு மீண்டும் முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனால் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் தற்போது நடந்துவரும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் அவரால் ஆடமுடியாமல் போனது. 

இந்நிலையில், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் முழு உடற்தகுதியை பெறவில்லை என்பதால், அந்த அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஹர்திக் பாண்டியா இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை. அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றுவருகிறார். 

Also Read - ஷுப்மன் கில் அதிரடி இரட்டை சதம்.. பிரியங்க் பன்சால், விஹாரி அபார சதம்.. நியூசிலாந்தை தெறிக்கவிட்ட நம்ம பசங்க

ஹர்திக் பாண்டியா எப்போது மீண்டும் அணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில், அதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, ஹர்திக் பாண்டியா உள்நாட்டு போட்டிகளில் ஆடுமளவிற்குக்கூட உடற்தகுதியை பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். அதனால்தான் அவர் ரஞ்சி போட்டியில் கூட பரோடா அணிக்காக ஆடவில்லை. 

ஹர்திக் பாண்டியாவின் கம்பேக்குக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பெற வாய்ப்பில்லை என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா அவருக்கு அறுவை சிகிச்சை செய்த லண்டன் மருத்துவரிடம், அதுகுறித்து பரிசோதனை செய்து தனது உடற்தகுதி குறித்து அறிந்துகொள்வதற்காக லண்டன் சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பியதும், முழு உடற்தகுதி பெறும்வரை பெங்களூருவில் உள்ள என்சிஏவில் பயிற்சி பெறுவார். அதனால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா கண்டிப்பா கண்டிப்பாக இருக்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.