வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி இந்த உலக கோப்பையில் தனது 4வது சதத்தை பூர்த்தி செய்தார்.

பர்மிங்காமில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் அடித்து நொறுக்கிவருகின்றனர். வழக்கமாக முதல் சில ஓவர்கள் நிதானமாக ஆடிவிட்டு பிறகு அதிரடியை தொடங்கும் ரோஹித் சர்மா, இந்த போட்டியில் முதல் ஓவரிலேயே சிக்ஸர் பறக்கவிட்டார். 

முஸ்தாபிசுர் வீசிய ஐந்தாவது ஓவரில் அபாயகரமான ரோஹித் சர்மாவின் கேட்ச்சை கோட்டை விட்டார் தமீம் இக்பால். அதன்பின்னர் அடுத்த ஓவரிலேயே சிக்ஸர் விளாசிய ரோஹித் சர்மா, தொடர்ந்து பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் கடந்தார். 

ரோஹித்தை தொடர்ந்து ராகுலும் அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பிறகு சற்று அமைதி காத்த ரோஹித், மொசாடெக் ஹுசைன் வீசிய 22வது ஓவரில் ஒரு மிகப்பெரிய சிக்ஸர் விளாசி மிரட்டினார். அந்த ஓவரை அத்துடன் விடாமல் கடைசி பந்தில் ஒரு பவுண்டரி அடித்து முடித்தார். அடுத்து ருபெல் வீசிய 23வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த ரோஹித், முஸ்தாபிசுர் வீசிய 24வது ஓவரின் முதல் பந்திலேயே மிகப்பெரிய சிக்ஸர் ஒன்றை விளாசினார். 

ஓவருக்கு ஓவர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ரோஹித் சர்மா, இந்த உலக கோப்பையில் நான்காவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் இந்த உலக கோப்பையில் இதுவரை அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த வார்னரை(516 ரன்கள்) முதலிடத்தை பிடித்தார். 

ரோஹித் சர்மா, 35 ஓவருக்கு பின்னர் சதமடித்தாலே அதை இரட்டை சதமாக மாற்றிவிடுவார். அப்படியிருக்கையில், தொடக்கம் முதலே எந்தவித பதற்றமும் இல்லாமல் அபாரமாக ஆடி 29வது ஓவரிலேயே சதமடித்துவிட்டதால் அதை இரட்டை சதமாக மாற்றிவிடுவார் என்பதால் இன்றும் அது நடக்குமா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சதமடித்த அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார். 104 ரன்களில் ரோஹித் ஆட்டமிழக்க, ராகுலுடன் கோலி ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இந்திய அணி இமாலய ஸ்கோரை எட்டுவது உறுதியாகிவிட்டது.