உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்தது. 338 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 306 ரன்களை மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இந்த உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக சதமடித்த ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிராகவும் சதமடித்தார். இந்த உலக கோப்பையில் 3 சதங்கள் அடித்துள்ளார் ரோஹித் சர்மா. உலக கோப்பையில் ரோஹித் அடித்த 4வது சதம். சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித்துக்கு இது 25வது சதம். இதன்மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார் ரோஹித் சர்மா. 

1. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 25 சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஆம்லா(151 இன்னிங்ஸ்), விராட் கோலி(162 இன்னிங்ஸ்) ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் ரோஹித் சர்மா(206 இன்னிங்ஸ்) உள்ளார். 

2. ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், 2015 உலக கோப்பையில் 4 சதங்கள் அடித்த சங்கக்கரா முதலிடத்தில் உள்ளார். தலா 3 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் மார்க் வாக்(ஆஸ்திரேலியா), கங்குலி, ஹைடன் ஆகியோரை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். 

3. உலக கோப்பையில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 6 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். 4 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் கங்குலியை, அதே 4 சதங்களுடன் சமன் செய்துள்ளார் ரோஹித் சர்மா.