அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளது. 2020 அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை நடக்கிறது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. அனைத்து அணிகளுமே பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும் விதமாக பல இளம் வீரர்களை இறக்கிவிட்டு பரிசோதிப்பதுடன் பேட்டிங் ஆட தெரிந்த பவுலர்களுக்கு முன்னுரிமை கொடுத்துவருகின்றனர். 

இந்திய அணியில் ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், ராகுல் சாஹர் ஆகிய வீரர்களுக்கு டி20 அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு அதிகமாக வாய்ப்பளிப்பது குறித்து பேசிய ரோஹித் சர்மா, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நிலையான அணி உள்ளது. அதிலிருந்து 11 வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே அந்த ஃபார்மட்டுகளில் இளம் வீரர்களுக்கு அதிகமாக வாய்ப்பளிக்க முடிவதில்லை. 

டி20 கிரிக்கெட் தான் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் களமாக திகழ்கிறது. டி20 கிரிக்கெட்டில் நன்றாக ஆடிய வீரர்கள், அங்கிருந்து அடுத்தடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் இடம்பெற்று அசத்தியிருக்கின்றனர். டி20 கிரிக்கெட் தான் இளம் வீரர்களை இறக்கிவிட்டு பரிசோதிக்கவும் அவர்களுக்கான வாய்ப்பை அளிக்கவும் சரியான களமாக இருப்பதால்தான் டி20 கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு அதிகமாக வாய்ப்பளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பென்ச் வலிமையை அதிகரிப்பதற்காகவும்தான் இளம் வீரர்கள் நிறைய பேர் சேர்க்கப்படுகின்றனர் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.