இந்தியா - நியூசிலாந்து இடையே ஹாமில்டனில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 179 ரன்கள் அடித்தது. 

180 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி, எப்போதும் இல்லாத அளவிற்கு, யாரும் எதிர்பாராத வகையில், இந்திய அணியின் சிறந்த பவுலரான பும்ராவின் பவுலிங்கை பொளந்துகட்டியது. குறிப்பாக வில்லியம்சன், பும்ராவின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவரான பும்ராவின் டெத் ஓவர்கள் நேற்றைய போட்டியில் பிரித்து மேயப்பட்டன. 

பும்ரா வீசிய 17வது ஓவரில் வில்லியம்சன் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். கடைசி 2 ஓவர்களில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரில் 11 ரன்களை வழங்கினார் பும்ரா. ஆனால் ஷமி கடைசி ஓவரை அபாரமாக வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்து, போட்டியை டை ஆக்கினார். நியூசிலாந்தை 4 பந்துகளில் 2 ரன்கள் அடிக்கவிடாமல், ஒரே ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து டை ஆக்கி, சூப்பர் ஓவர் வீச வழிவகுத்தார் ஷமி.

பும்ரா 4 ஓவர்கள் வீசி 45 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத நிலையில், ஷமி 4 ஓவரில் 32 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். நேற்றைய தினம் பும்ராவுக்கானது அல்ல. ஆனால் அதேவேளையில் ஷமி அபாரமாக வீசிக்கொண்டிருந்தார். அப்படியிருக்கையில், சூப்பர் ஓவர் ஷமியிடம் கொடுக்கப்படாமல் பும்ராவிடம் கொடுக்கப்பட்டது. 

பும்ராவின் பவுலிங்கை போட்டியில் அடித்து துவைத்ததை போல சூப்பர் ஓவரிலும் அடித்து துவம்சம் செய்தனர் வில்லியம்சனும் கப்டிலும். இதையடுத்து சூப்பர் ஓவரில் 17 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி. ஆனால் ரோஹித் சர்மாவின் அபாரமான பேட்டிங்கின் விளைவாக, இந்திய அணி 18 ரன்கள் என்ற கடினமான இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கடைசி 2 பந்திலும் 2 சிக்ஸர்களை விளாசி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் ரோஹித் சர்மா. 

இந்நிலையில், போட்டிக்கு பின்னர் பும்ராவிடம் சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது குறித்து பேசிய துணை கேப்டன் ரோஹித் சர்மா, சூப்பர் ஓவரில் என்ன செய்ய வேண்டும் என்று உண்மையாகவே தெளிவாக திட்டமிட முடியாது. அந்த குறிப்பிட்ட நாளில் அந்த ஆட்டத்தில் என்ன நடந்தது என்பதை மட்டுமே மதிப்பிட்டு முடிவுகளை எடுக்க முடியும். அணியின் சிறந்த வீரர்களை சூப்பர் ஓவரில் ஆடவிட வேண்டும். இந்திய அணியின் பவுலிங்கை பொறுத்தமட்டில் பும்ரா முக்கியமான அங்கம். ஆனாலும் ஷமி அல்லது ஜடேஜாவை அனுப்பலாமா என்று கூட குழப்பம் நிலவியது. 

ஏனெனில் க்ரிப்பிங் நன்றாக இருந்ததால், சுழற்றிவிட ஏதுவாக இருக்கும் என்பதால் ஜடேஜாவை வீசவைக்கலாமா என்று கூட யோசித்தோம். ஆனால் தொடர்ச்சியாக சிறப்பாக பந்துவீசி அணிக்காக பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ள மற்றும் நல்ல யார்க்கர்கள் வீசக்கூடிய, நல்ல வேரியேஷனை கொண்ட பும்ராவையே வீசவைக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.