முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களை குவித்து வலுவான முன்னிலையில் உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியின் மூலம், இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் அறிமுகமானார்கள். ஆஸ்திரேலிய அணியில் இளம் ஸ்பின்னர் டாட் மர்ஃபி அறிமுகமானார். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், புஜாரா, கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலிய அணி:
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், மேட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், டாட் மர்ஃபி, போலந்த்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 177 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாகவே மார்னஸ் லபுஷேன் 49 ரன்கள் தான் அடித்தார். ஸ்மித் 37 ரன்களும், அலெக்ஸ் கேரி 36 ரன்களும் அடித்தனர். இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும், அஷ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணியிலும் ரோஹித்தை தவிர வேறு யாரும் சரியாக பேட்டிங் ஆடவில்லை. ராகுல் (20), அஷ்வின்(23), கோலி(12), புஜாரா(7) ஆகிய வீரர்கள் சொதப்பினர். அறிமுக வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் தலா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த ரோஹித் சர்மா 120 ரன்கள் அடித்தார். ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். இந்திய அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் அடித்துள்ளது. ஜடேஜா 66 ரன்களுடனும், அக்ஸர் படேல் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் அறிமுகமான ஆஸ்திரேலிய ஸ்பின்னர் டாட் மர்ஃபி, அறிமுக டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.
