IND vs AUS: நாக்பூர் ஆடுகளத்தை நக்கலடித்த மார்க் வாக்.. தக்க பதிலடி கொடுத்து வாயை அடைத்த இர்ஃபான் பதான்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்துவரும் நாக்பூர் ஆடுகளத்தை ஆஸி., முன்னாள் வீரர் மார்க் வாக் விமர்சித்த நிலையில், அவருக்கு தக்க பதிலடி கொடுத்து வாயை அடைத்தார் இர்ஃபான் பதான்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியின் மூலம், இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் அறிமுகமானார்கள். ஆஸ்திரேலிய அணியில் இளம் ஸ்பின்னர் டாட் மர்ஃபி அறிமுகமானார்.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 177 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாகவே மார்னஸ் லபுஷேன் 49 ரன்கள் தான் அடித்தார். ஸ்மித் 37 ரன்களும், அலெக்ஸ் கேரி 36 ரன்களும் அடித்தனர். இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும், அஷ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணியிலும் ரோஹித்தை தவிர வேறு யாரும் சரியாக பேட்டிங் ஆடவில்லை. ராகுல் (20), அஷ்வின்(23), கோலி(12), புஜாரா(7) ஆகிய வீரர்கள் சொதப்பினர். அறிமுக வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் தலா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த ரோஹித் சர்மா 120 ரன்கள் அடித்தார். ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடிக்க, இந்திய அணி 300 ரன்களை கடந்து ஆடிவருகிறது.
இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், அதற்கு தகுந்த அணி மற்றும் தயாரிப்புகளுடன் தான் வந்தது ஆஸ்திரேலிய அணி. நேதன் லயன், அஷ்டான் அகர், டாட் மர்ஃபி ஆகிய ஸ்பின்னர்களுடன் வந்ததுடன், வலைப்பயிற்சியில் அஷ்வின் மாதிரியான ஒரு ஸ்பின்னரை வைத்து பயிற்சி மேற்கொண்டனர். ஆனாலும் அந்த அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானதன் விளைவாக, ஆடுகளத்தின் மீது குறை கூற தொடங்கிவிட்டனர்.
ரிக்கி பாண்டிங், மார்க் வாக் ஆகிய முன்னாள் வீரர்கள் ஆடுகளத்தை விமர்சித்துவருகின்றனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்த ஆடுகளத்தை ஸ்பின்னிற்கு சாதகமாக தயார் செய்வது மட்டுமே வழி என்றும், ஆஸ்திரேலியா அந்த மாதிரியெல்லாம் செய்யாது; ஆடுகள தயாரிப்பை மைதான ஊழியர்களிடமே விட்டுவிடும் என்றும் அதில் ஆஸ்திரேலிய அணி தலையிடாது என்றும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ஆடுகளம் குறித்து பேசிய ஆஸி., முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான மார்க் வாக், இந்திய ஆடுகளங்களில் பந்து திரும்புவது கூட பிரச்னையல்ல. ஆனால் சீரான சுழற்சி இல்லாமல், திடீரென ஒரு பந்து திரும்புகிறது; இன்னொரு பந்து திரும்பாமல் நேராக செல்கிறது. அதுதான் பேட்ஸ்மேன்களுக்கு பிரச்னையாக அமைகிறது என்றார் மார்க் வாக்.
அதற்கு, ”அதுதான் பவுலர்களின் தரம்” என்று இர்ஃபான் பதான் ஒரே ஸ்டேட்மெண்ட்டில் பதிலடி கொடுத்தார்.