டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்துவந்த ரோஹித் சர்மாவிற்கு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டார் ரோஹித் சர்மா. 

தொடக்க வீரராக இறங்கிய முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து அசத்திய ரோஹித் சர்மா, ராஞ்சியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தமாக 529 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார் ரோஹித். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் ரோஹித் சர்மாவின் சராசரி 99.84. சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 1298 ரன்களை குவித்துள்ள ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி 99.84. இது சொந்த மண்ணில் டான் பிராட்மேனின் பேட்டிங் சராசரியை விட அதிகம். டான் பிராட்மேன் அவரது சொந்த மண்ணான ஆஸ்திரேலியாவில் 4322 டெஸ்ட் ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 98.22 தான். ரோஹித் சர்மா, டான் பிராட்மேனை விட சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சராசரியை வைத்துள்ளார். 

சொந்த மண்ணில் குறைந்தது 1000 ரன்களை அடித்த வீரர்களில் அதிக சராசரி வைத்திருப்பதில், ரோஹித், பிராட்மேன் ஆகியோருக்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் ஜார்ஜ் ஹெட்லியும் அதற்கடுத்து ஸ்டீவ் ஸ்மித்தும் உள்ளனர். ஸ்டீவ் ஸ்மித்தின் சராசரி 77.56. 

ரோஹித் சர்மா தொடர்ந்து தனது கெரியர் முழுதும் இந்தியாவில் ஆடும் போட்டிகளில் சிறப்பாக ஆடும்பட்சத்தில் 100 சராசரியை கடந்து அபாரமான சாதனையை படைப்பதோடு, அந்த சாதனையை விட்டும் செல்லலாம்.