Ranji Trophy Final: மும்பைக்கு ஆதரவு தெரிவித்த ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் – வைரலாகும் வீடியோ!
ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் விதர்பா அணிக்கு எதிராக மும்பை அணி சிறப்பாக பேட்டிங் செய்து வரும் நிலையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் சர்மா இருவரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப் போட்டி கடந்த 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விதர்பா முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்கள் குவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 69 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து விதர்பா அணி பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரர் அதர்வா டைடே 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆதித்யா தக்கரே 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். யாஷ் ரத்தோட் 27 ரன்கள் சேர்க்க, யாஷ் தாக்கூர் 16 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த விதர்பா அணி 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர், 119 ரன்கள் முன்னிலையுடன் மும்பை அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 11 ரன்களிலும், பூபென் லால்வானி 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் அஜின்க்யா ரஹானே மற்றும் முஷீர் கான் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் கேப்டன் ரஹானே 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து முஷீர் கான் 326 பந்துகளில் 10 பவுண்டரி உள்பட 136 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் நின்னு நிதானமாக விளையாடினார். முதல் இன்னிங்ஸில் 7 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் நிதானமாக விளையாடி 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஷர்துல் தாக்கூர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
தனுஷ் கோடியன் 13 ரன்களில் நடையை கட்டினார். தற்போது வரை மும்பை அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில் ஷாம்ஸ் முலானி 42 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். மேலும், துஷார் தேஷ்பாண்டே 2 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப் போட்டியை நேரில் சென்று பார்த்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Rohit Sharma supporting the Ranji Trophy 🫡
— Johns. (@CricCrazyJohns) March 12, 2024
- This is a great message to all the players in Indian cricket. pic.twitter.com/Ij8tsAOiBy