இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா சதத்தை தவறவிட்டு 83 ரன்னில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த கேஎல் ராகுல் சிறப்பாக ஆடிவருகிறார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் இன்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

ஆட்டம் மழையால் பதினைந்து 25 நிமிடம் தாமதமாக தொடங்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு முன் மீண்டும் 10 நிமிட ஆட்டமும், உணவு இடைவேளைக்கு பின் 10 நிமிடமும் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

மழை ஏற்படுத்திய தடைகளையும் மீறி, இங்கிலாந்து பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடினர் ரோஹித்தும் ராகுலும். ரோஹித் - ராகுல் ஜோடி மிகத்தெளிவாகவும் நிதானமாகவும் ஆடி களத்தில் செட்டில் ஆனார்கள். ரோஹித் சர்மா பவுண்டரிகளை அடித்து ஆட, ராகுல் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார்.

வேகமாக ஆடி ஸ்கோர் செய்த ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின் சிக்ஸர் விளாசிய ரோஹித் சர்மா, அதன்பின்னர் பவுண்டரிகள் அடித்து வேகமாக ஸ்கோர் செய்தார். ஒருமுனையில் ரோஹித் அடித்து ஆட, மறுமுனையில் ராகுல் நிதானமாக ஆடி அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வேலையை மட்டும் செய்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 126 ரன்களை குவித்தனர். 

அபாரமாக ஆடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மா, ஆண்டர்சனின் இன்ஸ்விங்கில் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த புஜாராவும் 9 ரன்னில் ஆண்டர்சனின் பந்தில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ராகுல், அரைசதம் அடித்தார். புஜாரா ஆட்டமிழந்ததையடுத்து, கோலி ராகுலுடன் ஜோடி சேர்ந்த நிலையில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்திருந்த நிலையில், டீ பிரேக் விடப்பட்டது. கடந்த போட்டியில் அபாரமாக ஆடிய ராகுல், இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடிவருகிறார்.டீ பிரேக் முடிந்து ராகுலும் கோலியும் இணைந்து பேட்டிங் ஆடிவருகின்றனர்.