உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள இரு அணிகளாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பிர்மிங்காமில் நேற்று நடந்தது. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணியும், தோல்வியையே தழுவாத கெத்துடன் இந்திய அணியும் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, பேர்ஸ்டோவின் அதிரடி சதம் மற்றும் ஜேசன் ராய், ஸ்டோக்ஸின் அதிரடி அரைசதம் ஆகியவற்றால் 50 ஓவர் முடிவில் 337 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை அடித்தது. 

338 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் டக் அவுட்டாகி வெளியேற, அதன்பின்னர் உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களான ரோஹித்தும் கோலியும் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினர். இவர்கள் இருவரும் களத்தில் நின்றபோது இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 138 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த கோலி 66 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் வழக்கம்போல தனது அரைசதத்தை சதமாக மாற்றினார். ஆனால் சதமடித்த பிறகு பெரிய இன்னிங்ஸ் ஆடும் ரோஹித், இந்த முறை 102 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 

அதன்பிறகு ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா மட்டுமே அடித்து ஆடினர். தோனியும் கேதரும் கடைசி 5 ஓவர்களில் படுமோசமாக ஆடியதால் இந்திய அணி 306 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 

இந்த போட்டியில் ரோஹித்தும் கோலியும் இணைந்து 138 ரன்கள் அடித்ததன் மூலம் மற்றுமொரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். ரோஹித் - கோலி பார்ட்னர்ஷிப், ஒருநாள் போட்டிகளில் 100 ரன்களை கடந்து குவிப்பது இது 17வது முறையாகும். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 100 ரன்களுக்கு மேல் குவித்த ஜோடிகளில் சச்சின் டெண்டுல்கர் - கங்குலி(26 முறை) மற்றும் தில்ஷன் - சங்கக்கரா(20 முறை) ஆகிய ஜோடிகளுக்கு அடுத்த இடத்தில் ரோஹித் - கோலி ஜோடி உள்ளது. 

நான்காவது இடத்திலும் இந்திய ஜோடிதான். ரோஹித் - தவான் தொடக்க ஜோடி 16 முறை 100 ரன்களை கடந்து குவித்துள்ளது. ரோஹித் - தவான் மற்றும் கில்கிறிஸ்ட் - ஹைடன்(16 முறை) ஆகிய இரண்டு ஜோடிகளும் 4வது இடத்தை பகிர்ந்துள்ளது.