பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் @RishabhPantYoutube17 என்ற பெயரில் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இடம் பெற்று விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் 14 போட்டிகளில் 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்தது. அதோடு, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டில் தோற்று, தோல்வியோடு ஆரம்பித்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்று வெற்றியோடு தொடரை முடித்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு விபத்து காரணமாக ஓய்வில் இருந்த ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. கிட்டத்தட்ட 14 மாதங்களுக்கு பிறகு திரும்பி வந்த பண்ட் நேரடியாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இடம் பெற்று விளையாடினார்.
இந்த தொடரில் பண்ட் விளையாடிய 13 போட்டிகளில் 3 அரைசதங்கள் உள்பட 446 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 88* ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில் நடைபெறும் 9ஆவது டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார்.
இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒரு வாரத்தில் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறது. இந்த நிலையில் தான் மே 18 ஆம் தேதியான இன்று ரிஷப் பண்ட் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன்.
இது என் வாழ்க்கையைப் பற்றிய கூடுதல் தகவல்களை உங்களுக்கு வழங்கும். மேலும், நான் சில அற்புதமான கருத்துக்களை பதிவிட முயற்சிக்கிறேன். ஆகையால் இப்பொழுது சப்ஸ்கிரைப் செய்யுங்கள். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து என்னுடன் இணையுங்கள் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். ஆனால், இன்னும் ஒரு வீடியோ கூட பதிவிடாத நிலையில், 41,800 பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். ரிஷப் பண்ட் தனது யூடியூப் சேனலுக்கு @RishabhPantYoutube17 என்று பெயர் வைத்திருக்கிறார்.
