வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நேற்று தொடங்கியது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரண்டு அணிகளுக்குமே இது முதல் போட்டி. 

ஆண்டிகுவாவில் மழை பெய்ததால் போட்டி சற்று தாமதமானது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ராகுலும் மயன்க் அகர்வாலும் களமிறங்கினர். 

மயன்க் அகர்வால் வெறும் 5 ரன்களில் கீமார் ரோச்சின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரோச்சின் அதே ஓவரின் கடைசி பந்தில், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமும் நங்கூரமுமான புஜாரா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. புஜாராவின் விக்கெட்டால் நெருக்கடி அதிகரித்திருந்த நிலையில், கோலியும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். 25 ரன்களுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் ஆடிய ராகுலும் ரஹானேவும் கவனமாக ஆடி ரன்களை சேர்த்தனர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ராகுல், 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். இந்திய அணியின் ஸ்கோர் 93 ஆக இருந்தபோது ராகுல் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ரஹானேவுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். ரோஹித்தை விட முக்கியத்துவம் பெற்று, இந்திய அணியில் எடுக்கப்பட்டிருந்த ஹனுமா விஹாரி, தனது சேர்ப்பை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ஆடினார். ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து நன்றாக ஆடினார். ஆனாலும் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. 32 ரன்களில் அவரும் ரோச்சின் பந்தில் ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்து சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருந்த ரஹானே, 81 ரன்களில் கேப்ரியலிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். 

இதையடுத்து ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் அடித்துள்ளது. ரிஷப் பண்ட் 20 ரன்களுடனும் ஜடேஜா 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் எதிர்கால விக்கெட் கீப்பர் என ரிஷப் பண்ட் உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால், சஹா அணிக்கு திரும்பியும் கூட ரிஷப்பிற்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்மைக்காலமாக பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பிவரும் ரிஷப் பண்ட், இந்த போட்டியில் சிறப்பான இன்னிங்ஸை ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். என்ன செய்கிறார் என பொறுத்திருந்து பார்ப்போம். 

முதல் நாள் ஆட்டத்தில் இரு அணிகளுமே ஆதிக்கம் செலுத்தவில்லை. ஆரம்பத்தில் முக்கியமான 3 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியிருந்தாலும், அதன்பின்னர் இந்திய அணி மீண்டெழுந்தது. அதேநேரத்தில் இந்திய அணியும் அபாரமாக ஆடியது என்று சொல்லிவிட முடியாது. எனவே முதல் நாள் போட்டியில் இரு அணிகளுமே சம அளவில் ஆடியது என்றே சொல்ல வேண்டும்.