ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. கடந்த சீசனில் முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறிய டெல்லி கேபிடள்ஸ் அணி இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

ஆனால் காயம் காரணமாக இந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடாததால், ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்படவுள்ளார். பிரித்வி ஷா, தவான், ரஹானே, ரிஷப் பண்ட், ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் என பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது.

அஷ்வின், அக்ஸர் படேல், ரபாடா, நோர்க்யா என பவுலிங்கும் சிறப்பாகவே உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் கழட்டிவிடப்பட்ட ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி கேபிடள்ஸ் அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் ஸ்மித்துக்கு டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஆடும் லெவனில் தொடர்ச்சியாக இடம் கிடைப்பது சந்தேகம் தான்.

ஸ்மித் டாப் 3ல் ஆடக்கூடிய வீரர். ஆனால் டாப் 3ல் அவருக்கு இடம் இல்லை. ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்களே ஆடலாம். அந்தவகையில், ஹெட்மயர், ஸ்டோய்னிஸ், ரபாடா, நோர்க்யா ஆகிய நால்வருமே பெரும்பாலும் டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடுவார்கள். எனவே ஸ்மித்துக்கும் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில், ஸ்மித்தின் பேட்டிங் ஆர்டர் குறித்து பேசியுள்ள டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ஸ்மித் நீண்டகாலமாக ஆடிவரும் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டதால், இந்த சீசனில் சிறப்பாக ஆடும் முனைப்பில் உள்ளார். மேலும் அடுத்த சீசனுக்காக பெரிய ஏலம் நடக்கவிருப்பதால், இந்த சீசனில் சிறப்பாக ஆடினால், அடுத்த சீசனில் அதிக தொகைக்கு விலைபோகலாம் என்பதாலும் அவர் சிறப்பாக ஆடும் முனைப்பில் உள்ளார்.

எனவே இந்த சீசனில் டெல்லி அணியில் ஆட வாய்ப்பு பெற்றால் சிறப்பாக செயல்படுவார்; அது அணிக்கு பெரும் பலனத்தரும். அவரை 3 இடங்களில் ஒன்றில்தான் இறக்க வேண்டும். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அசத்திவிடுவார் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.