IPL 2023: டெல்லி கேபிடள்ஸின் தோல்விக்கு இதுதான் காரணம்..! பிளேயர்ஸ் மீது ரிக்கி பாண்டிங் செம காட்டம்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸூக்கு எதிரான போட்டியில் தோற்றதற்கு மோசமான ஃபீல்டிங் தான் காரணம் என்று டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 16வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - டெல்லி கேபிடள்ஸ் இடையேயான போட்டி லக்னோவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 193 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் ஐபிஎல்லில் அறிமுகமான லக்னோ அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி 36 பந்தில் 73 ரன்களை குவித்தார். 6வது ஓவரின் 3வது பந்தில் சேத்தன் சக்காரியா பவுலிங்கில் மேயர்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கலீல் அகமது தவறவிட்டார். அதை பயன்படுத்திக்கொண்ட கைல் மேயர்ஸ் அதன்பின்னர் சிக்ஸர் மழை பொழிந்து 26 பந்தில் அரைசதம் அடித்தார். 36 பந்தில் 7 சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்து லக்னோ அணி 193 ரன்களை குவிக்க காரணமாக இருந்தார்.
கைல் மேயர்ஸை தவிர லக்னோ அணியில் வேறு எந்த வீரரும் பெரியளவில் ஆடவில்லை. நிகோலஸ் பூரன் 21 பந்தில் 36 ரன்களும், ஆயுஷ் பதோனி 7 பந்தில் 18 ரன்களும் அடித்து முடித்து கொடுத்தனர். ஆனாலும் கைல் மேயர்ஸின் அதிரடியான பேட்டிங் தான் பெரிய ஸ்கோரை அடிக்க காரணமாக அமைந்தது. கைல் மேயர்ஸின் கேட்ச்சை கலீல் அகமது தவறவிட்டதுதான் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு பெரிய பிரச்னையாக அமைந்தது.
கேட்ச்சை கோட்டைவிட்டது மட்டுமல்லாது, டெல்லி கேபிடள்ஸின் ஃபீல்டிங்கும் சரியில்லை. அதன்விளைவாக அதிக ரன்களை வாரி வழங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணியால் 194 ரன்கள் என்ற இலக்கிற்கு பக்கத்தில் கூட போக முடியவில்லை. 143 ரன்கள் மட்டுமே அடித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸின் தோல்விக்கான காரணம் குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், லக்னோ அணி அடித்திருக்க வேண்டிய ஸ்கோரை விட அதிகமாக அடித்தது. எங்கள் அணியின் ஃபீல்டிங் இன்று சரியில்லை. முதல் 4 ஓவர்களுக்கு பின் ஃபீல்டிங் மோசமாக இருந்தது. 2 கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டன. ஃபீல்டிங் சரியாக செய்யாததால் ரன்களும் அதிகமாக வழங்கப்பட்டன. கைல் மேயர்ஸின் கேட்ச்சை கோட்டைவிட்டது பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அந்த கேட்ச் வாய்ப்பிற்கு பின் அடித்து நொறுக்கிவிட்டார்.
ஐபிஎல்லில் நல்ல வீரர்களுக்கு 2வது வாய்ப்பெல்லாம் கொடுக்கவே கூடாது. கைல் மேயர்ஸுக்கு 2வது வாய்ப்பு கொடுத்ததும் மிடில் ஓவர்களில் அடி வெளுத்துவிட்டார். குறிப்பாக எங்கள் ஸ்பின் பவுலிங்கை சிறப்பாக அடித்து ஆடினார். இது எங்களுக்கு நல்ல பாடமாக அமைந்தது. ஃபீல்டிங்கில் ஷார்ப்பாக இருக்க வேண்டும். பிரச்னைகளை கண்டறிந்து அவற்றை சரிசெய்துவிட்டு அடுத்த போட்டியில் களமிறங்குவோம் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.