கடைசிவரை ஷேன் வார்னிடம் நான் இதை சொல்லலயே.. இப்ப சொல்லணும்னு நெனக்கிறேன்; அவர் இல்லையே! கலங்கிய பாண்டிங்
ஷேன் வார்ன் உயிருடன் இருந்தவரை, அவரை எந்தளவிற்கு விரும்பினேன் என்பதை சொல்லவேஇல்லை என்று கூறி கண்கலங்கியுள்ளார் ரிக்கி பாண்டிங்.
ஆஸ்திரேலிய அணியின் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் 52 வயதில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்து, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். அவரது இறப்பு கிரிக்கெட் உலகையே உலுக்கியுள்ளது. முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
ஆல்டைம் பெஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவரான ஷேன் வார்ன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் பவுலர் ஆவார். அவர் இடைப்பட்ட காலத்தில் தடையில் இருந்ததால், அவரை முரளிதரன் முந்திவிட்டாரே தவிர, இல்லையென்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் வார்ன் தான் முதலிடத்தில் இருந்திருப்பார். அப்பேர்ப்பட்ட ஜாம்பவான் பவுலர் 52 வயதில் உயிரிழந்தது அனைவருக்குமே சோகத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக கிரிக்கெட்டில் அவரது நெருங்கிய நண்பர்களுக்கு நம்பமுடியாத பெருந்துயராக அவரது இறப்பு அமைந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஷேன் வார்னின் நெருங்கிய நண்பர்களில் முக்கியமானவர் ரிக்கி பாண்டிங். ஆஸ்திரேலிய அணியில் இணைந்து ஆடுவதற்கு முன்பாகவே அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பும் பழக்கமும் இருந்தது. அந்தவகையில், ஷேன் வார்னுடன் 15 வயதிலிருந்து பழகிய ரிக்கி பாண்டிங், மீளாத்துயரில் உள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் இருவரும் இணைந்து 12 ஆண்டுகள் ஆடியுள்ளனர். 1992ம் ஆண்டு ஷேன் வார்ன் அறிமுகமாக, 1995ம் ஆண்டு பாண்டிங் அறிமுகமானார். அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள்.
தனது நெருங்கிய நண்பரும், தனது அன்பிற்கும் உரியவரான ஷேன் வார்னிடம் அவர் உயிருடன் இருந்தவரை, தான் எந்தளவிற்கு அவர் மீது பாசம் வைத்திருந்தேன் என்பதை சொல்லவே இல்லை என்று கூறி வேதனைப்பட்டுள்ளார் பாண்டிங்.
இதுகுறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங், நான் ஷேன் வார்ன் மீது எந்தளவிற்கு அன்பும் பாசமும் வைத்திருந்தேன் என்பதை அவரிடம் சொன்னதே இல்லை. அதை இப்போது அவரிடம் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன் என்று கூறி கலங்கினார் பாண்டிங்.
மேலும் பேசிய பாண்டிங், நான் எழுந்து எனது வழக்கமான பணிகளை செய்துகொண்டிருந்தேன். என் குழந்தைகள் நெட்பால் விளையாட தயாராகி கொண்டிருந்தனர். அப்போது ஃபோன் வந்தது. என் மனைவி ரியானா ஃபோனை எடுத்து பேசிவிட்டு, என்னிடம் வார்ன் பற்றியை செய்தியை சொன்னார். அதிர்ச்சியடைந்த நான் ஃபோனை பறித்து பேசினேன். வார்ன் பற்றிய செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை. இப்போது வரை என்னால் நம்பமுடியவில்லை. என்னால் பேசவே முடியவில்லை. ஒவ்வொரு முறை, எங்களது அனுபவங்கள், எங்களது வாழ்க்கை பயணத்தை பற்றி நினைக்கும்போது எனக்கு வார்த்தைகள் நிறைய வராது என்று கூறி கலங்கியுள்ளார் பாண்டிங்.