ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸை நான்காவது ஓவரிலேயே ஷாஹின் அஃப்ரிடி வீழ்த்தினார்.

அதன்பின்னர் அந்த அணியால் இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தவே முடியவில்லை. வார்னரும் லபுஷேனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினர். வழக்கமான டெஸ்ட் இன்னிங்ஸ்களை போல மெதுவாகக்கூட ஆடவில்லை. சீராக பவுண்டரிகளை அடித்து ரன்னை சேர்த்துக்கொண்டே இருந்தனர். அப்படியிருந்தும் கூட அந்த ஜோடியை பாகிஸ்தான் பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை. 

வார்னர் மற்றும் லபுஷேன் ஆகிய இருவருமே சதமடிக்க, அதன்பின்னர் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிய வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். முதல் போட்டியில் இரட்டை சதத்தை தவறவிட்ட லபுஷேன், இந்த போட்டியிலும் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவறவிட்டார். வார்னரும் லபுஷேனும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 361 ரன்களை குவித்தனர்.

அதன்பின்னர் களத்திற்கு வந்த ஸ்மித் இந்த போட்டியிலும் பெரிதாக சோபிக்கவில்லை. முதல் போட்டியில் 4 ரன்களில் வெளியேறிய ஸ்மித், இந்த முறை 36 ரன்களில் ஆட்டமிழந்தார். லபுஷேன், ஸ்மித் ஆகியோர் ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய வார்னர், முச்சதம் அடித்தார். முச்சதத்திற்கு பிறகு அடித்து ஆடிய அவர் விரைவில் அடுத்த 35 ரன்களை அடித்தார். மேத்யூ வேடும் நன்றாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். வார்னர் மேலும் சில ஓவர்கள் பேட்டிங் ஆடியிருந்தால் கண்டிப்பாக 400 ரன்கள் விளாசியிருப்பார். ஏனெனில் அந்தளவிற்கு நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். 

ஆனால் அணியின் ஸ்கோர் 589 ரன்களாக இருந்தபோது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் டிக்ளேர் செய்தார். வெறும் 3 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா. வார்னர் 335 ரன்களுடன் அவுட்டே ஆகாமல் பெவிலியனுக்கு திரும்பினார். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறினர். வார்னரும் லபுஷேனும் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் அவர்களாக அவுட்டாகும்போது ஆகட்டும் என்கிற அளவிற்கு மனதை தளரவிட்டு கடமைக்கு பந்துவீசினர். 

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின், குறிப்பாக வார்னரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர்களின் போக்கிற்கே விட்டனர் பாகிஸ்தான் பவுலர்கள். எப்படியும் டிக்ளேர் செய்யத்தான் போகிறார்கள்; அவர்களாக செய்யட்டும் என்கிற மனநிலையில் பந்துவீசினர். ஆஸ்திரேலிய அணி இழந்த 3 விக்கெட்டுகளுமே ஷாஹின் அஃப்ரிடி வீழ்த்தியது. அவரைத்தவிர வேறு எந்த பாகிஸ்தான் பவுலருமே விக்கெட் வீழ்த்தவில்லை. மூசா, முகமது அப்பாஸ் ஆகியோருக்கு விக்கெட்டே விழவில்லை. 

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் முழுக்க முழுக்க பாகிஸ்தான் பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடினர். அனுபவம் இல்லாத இளம் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியை அந்த அணியின் கேப்டன் அசார் அலி சரியாக வழிநடத்தவில்லை என்பது ரிக்கி பாண்டிங்கின் குற்றச்சாட்டு. அசாரும் அனுபவம் இல்லாத கேப்டன் என்பதால் தான் இந்த நிலை.

இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், அசார் அலி அவரது கெரியரில் மொத்தமாகவே வெறும் 16 முதல் தர போட்டிகளில்தான் கேப்டனாக இருந்துள்ளார். எனவே அவருக்கு கேப்டனாக அனுபவம் குறைவு. பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் அனுபமில்லாத இளம் பவுலர்கள். எனவே அவர்களை வழிநடத்த வேண்டியது அசார் அலியின் பொறுப்பு.

ஆஸ்திரேலிய அணி ரன் அடிக்க தொடங்கியதும், அதைத்தடுப்பதில் கவனம் செலுத்தினார் அசார் அலி. பாகிஸ்தான் பவுலர்களிடம், பேட்ஸ்மேன்களை அட்டாக் செய்யுமாறு அசார் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் ரன்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தினர். அசார் அலியின் அணுகுமுறை தவறானது. பாகிஸ்தான் அணியின் பவுலிங் யூனிட் சிறந்த பவுலிங் யூனிட் இல்லை. அந்த அணிக்கு அனுபவமான பவுலர்கள் தேவை. 

இளம் பவுலர்களாக இருப்பதால், அவர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கேப்டன் அசார் தான் முடிவு செய்ய வேண்டும். அசாரே ஃபீல்டிங் செய்துவிட்டு, அதற்கேற்றவாறு அவர்களை பந்துவீச வைக்க வேண்டும். பவுலர்களிடமிருந்து ஒரு கேப்டனாக அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை தெளிவாக சொல்லி அவர்களிடமிருந்து அவுட்புட்டை பெற்றிருக்க வேண்டும். 16 வயதே ஆன இளம் ஃபாஸ்ட் பவுலரான நசீம் ஷாவை முதல் போட்டியில் சரியாக பயன்படுத்தாமல் இரண்டாவது போட்டியில் அவரை நீக்கிவிட்டனர் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.