ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசன் முழுவதுமே அம்பயர்கள் தவறான முடிவுகளின் மூலம் சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றனர்.

நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் லீக் சுற்று முடிகிறது. வரும் 7ம் தேதி தகுதிச்சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. இந்த சீசனில் அம்பயர்களின் செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை. ஒருமுறை, இருமுறை அல்ல; தொடர்ச்சியாக பலமுறை தவறுகள் செய்துகொண்டே இருக்கின்றனர். அதனால் அம்பயர்களின் முடிவுகள் மீது நம்பிக்கை சிதைந்துகொண்டே இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் மலிங்கா வீசிய கடைசி பந்து நோ பால். ஆனால் அம்பயர் நோ பால் கொடுக்காததால் ஆர்சிபி அணியின் வெற்றி பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் சிஎஸ்கே - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நோ பால் கொடுத்துவிட்டு வாபஸ் வாங்கியதால் தோனி களத்திற்குள் வந்து அம்பயர்களிடம் வாதிட்டார். அதுவும் பெரிய சர்ச்சையானது.

இவ்வாறு அம்பயர்களால் சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியிலும் அம்பயர் தவறாக நோ பால் கொடுத்து சர்ச்சையை கிளப்பினார். சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங்கின்போது கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். அந்த ஓவரில் வில்லியம்சன் 28 ரன்களை குவித்தார். அந்த ஓவர்தான் சன்ரைசர்ஸ் அணிக்கு முக்கியமானதாக அமைந்தது.

கடைசி ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 20 ரன்களை குவித்தார் வில்லியம்சன். ஐந்தாவது பந்தை உமேஷ் சரியாக போட்டார். ஆனால் அம்பயர் தவறுதலாக நோ பால் கொடுத்துவிட்டார். ரீப்ளேயில் உமேஷ் யாதவ் அந்த பந்தை சரியாக வீசியது தெரியவந்தது. அதனால் அதிருப்தியடைந்த கேப்டன் கோலியும் உமேஷும் அம்பயரிடம் வாதிட்டனர். ஆனால் அம்பயர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. அம்பயரின் மற்றுமொரு தவறான முடிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.