நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்காக கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஒரு வீரராக விராட் கோலி உலகம் முழுவதும் அதிகம் அறியப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து 2024 ஆம் ஆண்டுக்கான 17ஆவது சீசன் கடந்த 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.
இந்தப் போட்டிக்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இடம் பெற்று விராட் கோலி விளையாடினார். அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 2023 தொடரில் விராட் கோலி விளையாடினார். இதில், அவர் 14 போட்டிகளில் விளையாடி 6 அரைசதங்கள், 2 சதங்கள் உள்பட 639 ரன்கள் குவித்தார். இதில், அதிகபட்சமாக 101* ரன்கள் எடுத்தார். மேலும், 65 பவுண்டரியும், 16 சிக்சரும் விளாசியிருக்கிறார்.
இதுவரையில் 237 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 7263 ரன்கள் குவித்துள்ளார். இந்த நிலையில் தான் நடப்பு ஆண்டுக்கான முதல் போட்டி கடந்த 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 173 ரன்கள் குவித்தது. இதில் விராட் கோலி 20 பந்துகளில் ஒரு சிக்ஸர் உள்பட 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணியில் இடம் பெற்று விளையாடி வரும் விராட் கோலி தற்போது ரூ.15 கோடிக்கு இடம் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 2021 ஆம் ஆண்டு வரையில் ரூ.17 கோடிக்கு விளையாடி வந்தார். இந்த நிலையில் தான் இந்த சீசனுக்கு முன்னதாக ஐபிஎல் தொடருக்காக கூகுள் டிரெண்டிங்கில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்ந்துள்ளார். விராட் கோலியின் வருகை மற்றும் ஐபிஎல் 2024 தொடருக்காக நான் உற்சாகமாக இருக்கிறேன் என்று கூகுள் சிஇஓ கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
