Asianet News TamilAsianet News Tamil

#MIvsRCB ஐபிஎல் 14வது சீசனை வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி..! மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றி

ஐபிஎல் 14வது சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்க்
 

rcb beat mumbai indians in first match of ipl 2021
Author
Chennai, First Published Apr 9, 2021, 11:25 PM IST

ஐபிஎல் 14வது சீசன் இன்று தொடங்கியது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி, மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக், குவாரண்டினில் இருப்பதால், அவருக்கு பதிலாக கிறிஸ் லின் ஆடுகிறார். ரோஹித் சர்மாவும் கிறிஸ் லின்னும் தொடக்க வீரர்களாக இறங்கினர்.

கிறிஸ் லின் ஆரம்பத்தில் திணற, ரோஹித் சர்மா பவுண்டரி, சிக்ஸர் விளாசி வேகமாக ஸ்கோரை உயர்த்தினார். ரோஹித் சர்மா நன்றாக ஆடிக்கொண்டிருந்த 4வது ஓவரின் கடைசி பந்தில் கிறிஸ் லின் ரன்னுக்கு அழைத்துவிட்டு, பின்னர் மறுத்ததால், ரோஹித் சர்மா 19 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். ரோஹித் அவுட்டாகும் போது மும்பை அணியின் ஸ்கோர் 4 ஓவரில் 24. 

ரோஹித்தை ரன் அவுட்டாக்கிவிட்டதால், கூடுதல் பொறுப்புடன் ஆடவேண்டிய கட்டாயத்தில் இருந்த கிறிஸ் லின், அதிரடியாக ஆடினார். லின்னும் சூர்யகுமாரும் இணைந்து அடித்து ஆடி ஸ்கோர் செய்தனர். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் 31 ரன்னில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து லின்னும் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு, அணியின் ரன்வேகம் குறைய தொடங்கியது. ஹர்திக் பாண்டியா(13), இஷான் கிஷன்(28), க்ருணல் பாண்டியா(7), பொல்லார்டு(7) ஆகியோரும் ஏமாற்றமளிக்க, 20 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 159  ரன்கள் மட்டுமே அடித்தது. ஹர்ஷல் படேல் அபாரமாக வீசி, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, எங்கோயோ போயிருக்க வேண்டிய மும்பை அணியின் ஸ்கோரை  159 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார்.

160 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக கோலியும் வாஷிங்டன் சுந்தரும் இறங்கினர். அந்த அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் கொரோனாவிலிருந்து அண்மையில் தான் மீண்டார். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் இந்த போட்டியில் ஆடவில்லை. அதனால் வாஷிங்டன் சுந்தர் தொடக்க வீரராக இறங்கினார். கோலி தொடக்க வீரராக இறங்குவது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ஆனால் சுந்தர் ஓபனிங்கில் இறங்கியது சர்ப்ரைஸ் தான்.

ஆனால் தொடக்க வீரராக இறங்க கிடைத்த வாய்ப்பை சுந்தர் பயன்படுத்தி கொள்ளவில்லை. தொடக்கம் முதலே சரியாக ஷாட் கனெக்ட் ஆகாமல் திணறிய சுந்தர், 10 ரன்னில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய அறிமுக வீரர் ரஜாத் பட்டிதார் 8 ரன்னில் பவர்ப்ளேயின் கடைசி பந்தில் போல்ட்டின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் கோலியும் மேக்ஸ்வெல்லும் இணைந்து சிறப்பாக ஆடினர். இருவரும் இணைந்து 3 வது விக்கெட்டுக்கு 52 ரன்களை சேர்த்தனர். கோலி - மேக்ஸ்வெல் பார்ட்னர்ஷிப்பை உடைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், பும்ராவை அழைத்துவந்தார் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா. அதற்கு பலன் கிடைத்தது. 13வது ஓவரில் கோலியை 33 ரன்னில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் பும்ரா.

இதையடுத்து 15வது ஓவரில் மும்பை அணியின் அறிமுக பவுலர் ஜென்சனின் பந்தில் 39 ரன்னில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, ஷபாஸ் அகமது மற்றும் டேனியல் கிறிஸ்டியன் ஆகிய இருவருமே தலா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ்.

ஆனால் டிவில்லியர்ஸ் மட்டும் ஒருமுனையில் களத்தில் நின்றதாலும், இலக்கு கடினமானது இல்லை என்பதாலும், டெத் ஓவர்களை பும்ராவும் போல்ட்டும் வீசியபோதிலும் இலக்கை எளிதாக எட்ட உதவினார் டிவில்லியர்ஸ். இதையடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 14வது சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது ஆர்சிபி. கடைசி ஓவரின் 4வது பந்தில் டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்தபோதிலும், கடைசி 2 பந்தில் 2 ரன் மட்டுமே தேவை என்பதால் அதை அடித்து ஆர்சிபி வெற்றி பெற்றது. இதையடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 14வது சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது ஆர்சிபி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios