2010ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்த தமிழகத்தை சேர்ந்த ஆஃப் ஸ்பின்னர் அஷ்வின், அதற்கடுத்த ஆண்டே, டெஸ்ட் அணியில் அறிமுகமானார். 2011 உலக கோப்பை அணியிலும் அஷ்வின் இருந்தார். 

தோனி கேப்டனாக இருந்த காலத்தில் அவரது ஆஸ்தான வீரர்களாக திகழ்ந்த சில பேரில் அஷ்வின் முக்கியமானவர். அதற்கு முக்கிய காரணம், ஐபிஎல்லிலும் தோனியின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணியில் அவர் ஆடியதுதான். ஐபிஎல்லிலும் தனது கேப்டன்சியில் ஆடிய அஷ்வின், ரெய்னா, ஜடேஜா ஆகியோர் எப்போதுமே மற்றவர்களை காட்டிலும் தோனிக்கு நெருக்கமானவர்களாக இருந்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க தோனியுடனேயே பயணிப்பதால் அவர்களுக்கும் தோனிக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. 

தோனிக்கு அஷ்வின் மீது நல்ல அபிப்ராயமும் நம்பிக்கையும் இருந்ததால் அஷ்வின் அணியில் நிரந்தர இடம்பிடித்தார். தனது அருமையான மற்றும் வெரைட்டியான ஸ்பின் பவுலிங்கின் மூலம் எதிரணி வீரர்களை திணறடித்து இந்திய அணியின் வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்தார் அஷ்வின். இதையடுத்து அணியில் நிரந்தர இடம்பிடித்தார். 

ஹர்பஜன் சிங் என்ற சீனியர் நட்சத்திர ஆஃப் ஸ்பின்னர், அதுவும் அவரது கெரியரின் நல்ல நிலையில் இருந்தபோதே, அவரை ஓரங்கட்டி அணியில் இடம்பிடித்து, அதை தக்கவைத்து சாதித்துக்காட்டியவர் அஷ்வின். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 அணிகளிலும் அஷ்வின் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டதால் ஹர்பஜன் சிங் தனக்கான வாய்ப்பை இழந்தார். அதன்பின்னர் தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்படாமல் எப்போதாவதுதான் ஹர்பஜன் சிங் அணியில் எடுக்கப்பட்டார். தனது இடத்தை அஷ்வின் பிடித்துவிட்டதால், அஷ்வின் மீது எப்போதுமே ஹர்பஜனுக்கு ஒரு கோபம் உள்ளே இருந்துகொண்டு தான் இருக்கிறது. அதை அவ்வப்போது ஹர்பஜன் சிங் பல வகையில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. 

2017ம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ஆடிராத அஷ்வின், டெஸ்ட் அணியின் முதன்மை ஸ்பின்னராக திகழ்ந்துவருகிறார். இந்திய அணிக்காக இதுவரை 70 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 362 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஷ்வின், 111 ஒருநாள் போட்டிகளில் ஆடி 150 விக்கெட்டுகளையும் 46 டி20 போட்டிகளில் ஆடி 52 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 250, 300, 350 விக்கெட்டுகளை என்ற மைல்கல்லை எட்டியவர் அஷ்வின். 

இந்நிலையில், இந்திய அணியில் ஹர்பஜன் இருக்கும்போதே தனக்கான நிரந்தர இடத்தை பிடித்தது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஷ்வின் பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அஷ்வின், நமது நாட்டுக்காக ஆடுவது என்பது மிகப்பெரிய கௌரவம். ஒரு கிரிக்கெட் வீரராக கனவு நிறைவேறிய தருணம் அது. ஆரம்பத்தில் எனது ரோலை நான் சரியாக செய்தேன். உள்நாட்டு போட்டிகளில் அதிகமாக ஆடியிருந்தது எனக்கு உதவியது. என் மீது பெரியளவில் எந்த அழுத்தமும் இல்லை. எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்ததும், இந்தியாவுக்காக ஆடுகிறேன் என்பதை உணர்ந்து, ரசித்து, மகிழ்ந்து ஆடினேன். நான் என்றைக்குமே வேறு ஒருவருடைய இடத்தை நிரப்பியிருக்கிறேன் என்று நினைத்ததில்லை. எனக்கான இடத்தை நான் உருவாக்கி கொண்டேன். அதற்கு தோனி முக்கிய காரணம். ஒரு கேப்டனாக தோனி எப்போதுமே எனக்கு நம்பிக்கையும் ஆதரவும் அளித்துவந்துள்ளார் என்று அஷ்வின் தெரிவித்துள்ளார்.