இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நாளை தரம்சாலாவில் நடைபெறும் 5ஆவது டெஸ்ட் போட்டியின் மூலமாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் தங்களது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கின்றனர்.

இந்தியா வந்த இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் இந்திய அணி அதிகபட்சமாக 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Scroll to load tweet…

இதைத் தொடர்ந்து தொடரை தீர்மானிக்கும் 4ஆவது போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. கடைசியாக இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தரம்சாலாவில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் நாளை நடைபெறும் 5ஆவது டெஸ்ட் போட்டியின் மூலமாக தங்களது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கின்றனர். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் தொடரில் அறிமுகமாகினர்.

இதுவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 507 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும், 35 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 8 முறை 10 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,309 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதமும், 14 அரைசதமும் அடித்துள்ளார். இந்திய மண்ணில் 350 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளார். அதோடு இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்டுகள் கைப்பற்றி அஸ்வின் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடக்கும் 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலமாக இந்திய அணிக்காக 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 14ஆவது வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.

இதே போன்று இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் நாளை நடக்கும் போட்டியின் மூலமாக தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறார். இதுவரையில் 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,974 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 12 சதமும், 26 அரைசதங்களும் அடித்துள்ளார்.

Scroll to load tweet…