இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் நடப்பு வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது. இதையடுத்து ஏற்கனவே பிசிசிஐ, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை பெற்றது. 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்ததாக தகவல் வெளிவந்தது. அதிலிருந்து 6 பேர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டனர். 

டாம் மூடி, மைக் ஹெசன், ராபின் சிங், ஃபில் சிம்மன்ஸ், லால்சந்த் ராஜ்பூத் மற்றும் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இவர்கள் 6 பேருக்கும் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது. 

கபில் தேவ் தலைமையிலான கெய்க்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழு, இந்த 6 பேரையும் இன்று நேர்காணல் செய்தது.


இந்நிலையில் கபில் தேவ் தலைமையிலான தேர்வு குழு, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை மீண்டும் தேர்வு செய்துள்ளது.  2021 ஆம் ஆண்டு வரை ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.