உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையில் தீவிரமாக கவனக்கப்படக்கூடிய வீரர்களில் ரஷீத் கானும் ஒருவர். 

பும்ரா, ரஷீத் கான், ஆர்ச்சர், ரபாடா ஆகிய இளம் திறமைகளுக்கு இதுதான் முதல் உலக கோப்பை தொடர். இவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதோடு முன்னாள் ஜாம்பவான்களின் கவனக்குவிப்பும் உள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ரஷீத் கான் பேட்டிங்கில் மிரட்டிவிட்டார். முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 208 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணியின் வார்னர் - ஃபின்ச்சின் அதிரடியான மற்றும் அபாரமான பேட்டிங்கால் 35வது ஓவரிலேயே எட்டி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 

ஆஃப்கானிஸ்தான் அணி தோற்றிருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது அந்த அணி. 77 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், அதன்பின்னர் சரிவிலிருந்து மீண்டு சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தநிலையில், கேப்டன் குல்பாதின் நைபும் நஜிபுல்லாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். ஆஃப்கானிஸ்தான் அணியை இவர்கள் இருவரும் சரிவிலிருந்து மீட்டனர். ஆறாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 83 ரன்கள் சேர்த்தனர். நைப் 31 ரன்களிலும் அரைசதம் அடித்த நஜிபுல்லா 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தவ்லத் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 

8 விக்கெட்டுகளை ஆஃப்கானிஸ்தான் அணி இழந்தபிறகு, ரஷீத் கான் ருத்ரதாண்டவம் ஆடினார். மனதை தளரவிடாமல் கொஞ்சம் கூட பதற்றப்படாமல் ஆக்ரோஷமாக ஆடினார் ரஷீத் கான். மார்கஸ் ஸ்டோய்னிஸ் வீசிய 36வது ஓவரில் 2 சிக்ஸர்கள்  மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார் ரஷீத் கான். 37வது ஓவரை முஜீபுர் ரஹ்மான் எதிர்கொண்டார். மீண்டும் 38வது ஓவரின் இரண்டாவது பந்தையும் சிக்ஸருக்கு விரட்டி மிரட்டிய ரஷீத் அடுத்த பந்தில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் முஜீபுரும் ஆட்டமிழந்ததால் அந்த அணி 207 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது. 

விக்கெட்டுகள் சரிந்தாலும் ரஷீத் கானின் போராட்ட ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. பெரிய பெரிய அணிகளே பேட்டிங்கில் சொதப்பும் நிலையில், ஆஃப்கானிஸ்தான் மிடில் ஆர்டர்கள் ஆடிய விதம் அபாரமானது.