IPL 2023: சவாய் மான்சிங் ஹோம் மைதானத்தில் டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் ராயல்ஸ்: லக்னோவை விரட்டி அடிக்க ஆயத்தம்!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் இன்று நடக்கும் 26ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்த மைதானத்தில் 2ஆவதாக பேட்டிங் அணியே அதிகளவில் வெற்றி பெற்றுள்ளது. இங்கு நடந்த 47 போட்டிகளில் இரண்டாவதாக ஆடிய அணி 32 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. முதலில் ஆடிய அணி 15 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. ஆகையால், இந்த மைதானத்தைப் பொறுத்த வரையில் டாஸ் ஜெயித்து பீல்டிங் தேர்வு செய்யும் அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக முந்தைய ரெக்கார்ட்ஸ் தெரிவிக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர், துருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சகால்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் கூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், குர்ணல் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் பதோனி, நவீன் உல் காக், ஆவேஷ் கான், யுத்விர் சிங் சராக், ரவி பிஷ்னாய்.
சவாய் மான்சிங் மைதானத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. இதுவே இந்த மைதானத்தில் அதிகபட்ச ரன் சேஸ் ஆகும். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து வெற்றி கண்டுள்ளது. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 5 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதே போன்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 2 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்த வரையில் கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மையர் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதே போன்று பந்து வீச்சைப் பொறுத்த வரையில் ஆடம் ஜம்பா, டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சகால் ஆகியோர் சிறப்பாக பந்து வீச்சை வெளிப்படுத்துகின்றனர். இந்தப் போட்டியில் டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினால் ஐபிஎல் வரலாற்றில் 100 விக்கெட்டுகள் எடுப்பார்.
IPL 2023: மும்பையில் 1000ஆவது ஐபிஎல் போட்டி; என்ன செய்யலாம்? புதிய பிளான் போடும் பிசிசிஐ!
இதே போன்று லக்னோ அணியைப் பொறுத்தவரையில் கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், தீபக் கூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், குர்ணல் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் ஆடுகின்றனர். பந்து வீச்சைப் பொறுத்த வரையில் மார்க் வுட், ரவி பிஷ்னாய், அமித் மிஸ்ரா, ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். குர்ணல் பாண்டியா இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினால் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றுவார்.