ரவீந்திர ஜடேஜா இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் சதம் அடித்த நிலையில், அவரது திறமையை 14 ஆண்டுகளுக்கு முன்பே அடையாளம் கண்ட ஷேன் வார்ன் நேற்று உயிரிழந்துவிட்ட நிலையில், ஷேன் வார்னை பெருமைப்படுத்திவிட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உருக்கமான டுவீட் செய்துள்ளது. 

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி முதல் இன்னிங்ஸில் 574 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. 

இந்திய அணியில் அபாரமாக விளையாடி சதமடித்த ரவீந்திர ஜடேஜா 175 ரன்களை குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். வழக்கம்போலவே அடித்து ஆடிய ரிஷப் பண்ட் 97 பந்தில் 96 ரன்கள் அடித்தார். அஷ்வின் 61 ரன்களும், கோலி 45 ரன்களும் அடித்தனர். அபாரமாக விளையாடி 175 ரன்களை குவித்த ஜடேஜா பல சாதனைகளையும் படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 7ம் வரிசையில் இறங்கி அதிக ரன்களை (175) குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7ம் வரிசையில் இறங்கி, மூன்று 100+ பார்ட்னர்ஷிப்பில் பங்கெடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார்.

இந்நிலையில், ஜடேஜாவின் திறமையை 14 ஆண்டுகளுக்கு முன்பே அடையாளம் கண்டு அவரை ராக்ஸ்டார் என அங்கீகரித்த ஷேன் வார்ன் உயிரிழப்பால் கிரிக்கெட் உலகமே சோகத்தில் ஆழ்ந்திருக்கும் தினத்தன்று, ஷேன் வார்னின் கணிப்பை உண்மை தான் என நிரூபிக்கும் விதமாக சதமடித்து அசத்தியுள்ளார் ஜடேஜா.

2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியபோது, ஜடேஜா, ஷேன் வாட்சன், யூசுஃப் பதான், சொஹைல் தன்வீர்,முனாஃப் படேல் ஆகிய இளம் வீரர்களை கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தலைமையேற்று வழிநடத்தினார் ஷேன் வார்ன். 

மும்பை இந்தியன்ஸில் சச்சின் - ஜெயசூரியா, சிஎஸ்கேவில் தோனி - முரளிதரன் - மேத்யூ ஹைடன், ஆர்சிபியில் ராகுல் டிராவிட் - ஜாக் காலிஸ் - கும்ப்ளே, டெக்கான் சார்ஜர்ஸில் கில்கிறிஸ்ட் - அஃப்ரிடி - சைமண்ட்ஸ், கேகேஆரில் கங்குலி - பாண்டிங் - அக்தர் என ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 4-5 பெரிய ஜாம்பவான் கிரிக்கெட்டர்கள் இடம்பெற்றிருந்தனர்.

ஆனால் ஷேன் வார்ன் தலைமையில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், பிற்காலத்தில் பெரிய வீரர்களாக உருவெடுத்த, ஆனால் அந்த காலக்கட்டத்தில் இளம் வீரர்களாக இருந்த ஜடேஜா, ஷேன் வாட்சன், யூசுஃப் பதான், முனாஃப் படேல் ஆகிய வீரர்கள் தான் ஆடினார். அதனால் யாருமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பெரிதாக மதிப்பிடவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை. 

ஆனால் டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற, பெரிய பெரிய வீரர்களை அணியில் பெற்றிருப்பது மட்டுமே முக்கியமல்ல. சிறப்பான களவியூகம், வியூகத்தை களத்தில் சரியாக செயல்படுத்துவது, வீரர்களை திறம்பட கையாண்டு அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவருவது ஆகியவை தான் முக்கியம் என்பதை, டி20 கிரிக்கெட் அறிமுகமான ஆரம்ப காலத்திலேயே நிரூபித்து காட்டியவர் ஷேன் வார்ன்.

அந்த ஐபிஎல்லில் தனது கேப்டன்சியின் கீழ் ஆடிய 19 வயது இளம் வீரரான ஜடேஜா, கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் மிரட்டல் ஃபாஸ்ட் பவுலரான பிரெட் லீயின் பவுலிங்கை பயப்படாமல் அடித்து நொறுக்கியதை கண்டு அசந்துபோன ஷேன் வார்ன், ஜடேஜாவை ராக்ஸ்டார் என புகழ்ந்ததுடன், சூப்பர் டேலண்ட் என அங்கீகரித்தார்.

நேற்று ஷேன் வார்ன் காலமான நிலையில், இன்று இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் ஜடேஜா சதமடித்ததையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜடேஜாவை ராக்ஸ்டார் என நினைவுகூர்ந்ததுடன், ஷேன் வார்னுக்கு பெருமை சேர்த்துவிட்டதாக டுவீட் செய்துள்ளது. அந்த டுவீட் செம வைரலாகிவருகிறது.

Scroll to load tweet…