ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கிய கேகேஆர் அணி தற்போது பரிதாப நிலையில் உள்ளது. 

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கேகேஆர் அணி, ஆண்ட்ரே ரசலின் புண்ணியத்தால் முதல் 5 போட்டிகளில் 4ல் வெற்றியுடன் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய கேகேஆர் அணி, அதன்பின்னர் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 

5 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்த கேகேஆர் அணி, ராஜஸ்தான் அணியை நேற்று எதிர்கொண்டது. ராஜஸ்தானை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் களமிறங்கிய கேகேஆர் அணிக்கு நேற்றும் தோல்வியே மிஞ்சியது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் லின் மற்றும் ராணா, கில், சுனில் நரைன், ரசல் என யாருமே சோபிக்கவில்லை. ரசல் பேட்டிங் ஆடும்போதே மணிக்கட்டு வலியால் துடித்தார். அதனால் அவரும் வெறும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய தினேஷ் கார்த்திக், இதுவரை கேகேஆர் அணிக்கு ரசல் செய்துவந்த ஃபினிஷிங் வேலையை நேற்று அவர் செய்தார். டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்த தினேஷ் கார்த்திக், 50 பந்துகளில் 97 ரன்களை குவித்தார். கடைசி பந்தில் பவுண்டரி அடித்திருந்தால் சதத்தை எட்டியிருப்பார். ஆனால் சிங்கிள் மட்டுமே அடித்தார். ஐபிஎல்லில் தினேஷ் கார்த்திக்கின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். 

தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் கேகேஆர் அணி 175 ரன்களை அடித்தது. 176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ரஹானேவும் சாம்சனும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அவர்கள் ஆட்டமிழந்த பிறகு ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பின்னி என வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. ஆனால் இளம் வீரர் ரியான் பராக், அபாரமாக ஆடி வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார். 

ஆனால் அவர் 19வது ஓவரில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற பரபரப்பான நிலை உருவானது. பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தார் ஜோஃப்ரா ஆர்ச்சர். 

இந்த தோல்வி கேகேஆர் அணிக்கு தொடர்ச்சியாக ஆறாவது தோல்வி. இதையடுத்து 8 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது கேகேஆர் அணி. ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் 7ம் இடத்திலும் ஆர்சிபி அணி 8 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன. 

கேகேஆர் அணிக்கு எஞ்சிய 3 போட்டிகளில் 2ல் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத உள்ளது. 8 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளதால் பிளே ஆஃபிற்கு கேகேஆர் அணி முன்னேறுவது கடினம். சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். எஞ்சிய ஒரு இடத்தை சன்ரைசர்ஸ் அல்லது பஞ்சாப் அணி பிடிக்க வாய்ப்புள்ளது.