இந்திய அணியின் ஆல்டைம் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் ராகுல் டிராவிட். அவர் ஆடிய காலத்தில் இந்திய அணியை பல இக்கட்டான சூழல்களில் இருந்து மீட்டெடுத்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தவர். தடுப்பாட்டத்திற்கு பெயர்போன அவர் தடுப்புச்சுவர் என்றே அழைக்கப்படுகிறார். 

கிரிக்கெட்டில் ஆடிய போது, சுயநலத்துடன் ஒரு இன்னிங்ஸ் கூட ஆடாத ஒரு வீரர் ராகுல் டிராவிட். தான் ஆடிய காலத்தில் இந்திய கிரிக்கெட்டுக்காக எப்படி உழைத்தாரோ, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும், அதே உழைப்பை தொடர்ந்து அளித்துவருகிறார். அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ ஆகியஅணிகளின் தலைமை பயிற்சியாளராக இருந்து பிரித்வி ஷா, ஷுப்மன் கில், மயன்க் அகர்வால் உள்ளிட்ட பல அபாரமான திறமைசாலிகளை செதுக்கி இந்திய அணிக்கு கொடுத்தார். 

அவரது பயிற்சிக்காலத்தின் கீழ், 2016 அண்டர் 19 உலக கோப்பை இறுதி போட்டிவரை சென்று, இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் தோற்று கோப்பையை இழந்தது இந்திய அண்டர் 19 அணி. ஆனால் 2016ல் விட்டதை 2018ல் இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தார் ராகுல் டிராவிட். 2018ல் பிரித்வி ஷா தலைமையிலான அண்டர் 19 இந்திய அணி உலக கோப்பையை வென்றது. அவர் போட்ட விதைதான் இன்று இந்திய கிரிக்கெட்டில் விருட்சமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பின்னர் அண்டர் 19 அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக டிராவிட் நியமிக்கப்பட்டார். 

தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக தனது பணியை தொடர்ந்துவருகிறார். இந்திய கிரிக்கெட்டிற்கு வீரராகவும், பயிற்சியாளராகவும் பல வகைகளில் தனது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துவரும் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட், அவரை போலவே மிகப்பெரிய வீரராக வருவதற்கான அனைத்து அடையாளங்களுடனும் அபாரமாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். 

Also Read - கோர விபத்தில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர்.. சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் வீரர்கள்

இரண்டு மாதங்களுக்கு இடையில் 2 இரட்டை சதங்களை விளாசியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் கர்நாடகாவில் நடந்த அண்டர் 14 மண்டல அளவிலான போட்டியில் வைஸ் பிரசிடண்ட்ஸ் லெவன் அணியில் ஆடிய சமித் டிராவிட், தர்வாத் மண்டல அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 250 பந்தில் 201 ரன்களை குவித்த சமித் டிராவிட், இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 94 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக 295 ரன்களை குவித்தார் சமித் டிராவிட். 

இந்நிலையில், தற்போது மல்லையா அதிதி இண்டர்நேஷனல் பள்ளி சார்பில், பிடிஆர் ஷீல்டுக்கான அண்டர் 14 பிரிவில் ஆடிய சமித் டிராவிட், எதிரணியின் பவுலிங்கை அடித்து துவம்சம் செய்து இரட்டை சதமடித்தார். 27 பவுண்டரிகளுடன் 211 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கவில்லை சமித் டிராவிட். அவரது இரட்டை சதத்தால் அவர் ஆடிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்களை குவித்தது. எதிரணி வெறும் 254 ரன்கள் மட்டுமே அடித்ததால், 132 ரன்கள் வித்தியாசத்தில் சமித் டிராவிட் ஆடிய அணி அபார வெற்றி பெற்றது. 

Also Read - இந்திய வீரர்கள் ரொம்ப நல்லவங்க.. நல்லா பழகுனா எல்லாத்தையும் கத்து கொடுப்பாங்க.. நியூசிலாந்து வீரர் புகழாரம்

கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரு இரட்டை சதமடித்திருந்த சமித் டிராவிட், தற்போது மீண்டுமொரு இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.