இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி வென்றது. 

அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடர் முடிந்து 15 நாட்களுக்கு மேல் இடைவெளிவிட்டுத்தான் டெஸ்ட் போட்டிகள் தொடங்குகின்றன. 

எனவே இந்த இடைப்பட்ட காலத்தில் வீரர்கள் இணைந்து பழகுவதற்கு ஏற்ற காலமாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்திய வீரர்கள் தங்களது அனுபவங்களையும் உத்திகளையும் பகிர்ந்துகொள்ளக்கூடியவர்கள் எனவும் அவர்களது ஆலோசனைகள் மிகவும் உதவிகரமாக இருப்பதாகவும் நியூசிலாந்து ஸ்பின்னர் இஷ் சோதி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள இஷ் சோதி, இந்திய வீரர்களுக்கு மதிப்பளித்து அவர்களிடம் பேசினால், அவர்களது அனுபவங்கள் உட்பட நிறைய விஷயங்களை பகிர்ந்துகொள்வார்கள். அவையெல்லாம் மிகவும் உதவிகரமாக இருக்கும். 

சாஹல் சிறந்த மனிதர். அவர் ஒரு முழுமையான ஸ்பின்னர். நல்ல இதயம் சிறந்த மனிதர். சாஹல், அஷ்வின், ஜடேஜா ஆகியோரிடம் பேசி, அவர்களது அனுபவங்களை கேட்டு தெரிந்துகொள்வதெல்லாம் மிகச்சிறந்த அனுபவமாக எனக்கு அமைந்தது. 

Also Read - கோர விபத்தில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர்.. சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் வீரர்கள்

ஜடேஜாவிடம் ஒரு நாள் பேசினேன். அவரது டிரெய்னிங் குறித்து கேட்டறிந்தேன். அதேபோல அஷ்வினிடம் கேரம் பந்து, கூக்ளி பந்து வீசுவது குறித்தெல்லாம் கேட்டறிந்தேன். அஷ்வின் ஆஃப் ஸ்பின்னராக இருந்தாலும்கூட, சிறப்பாக கூக்ளி வீசக்கூடியவர். இந்திய வீரர்கள் மிகச்சிறந்தவர்கள் என இஷ் சோதி புகழ்ந்து பேசியுள்ளார்.