கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தலாக செயல்பட்டு இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இஷாந்த் சர்மாவும் இரண்டாவது இன்னிங்ஸில் உமேஷ் யாதவும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். விராட் கோலி அபாரமாக ஆடி சதமடித்தார்.

 

இதன்மூலம் பிங்க் பந்தில் முதல் சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றதாக புகழப்பட்டு வருகிறார். ஆனால் பிங்க் பந்தில் முதலில் சதமடித்த இந்திய வீரர் கோலி அல்ல. இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தற்போதைய தலைவருமான ராகுல் டிராவிட். 

ஆம்.. கவுண்டி கிரிக்கெட்டில் எம்சிசி அணிக்காக ஆடிய ராகுல் டிராவிட் 2011ல் பிங்க் பந்தில் சதமடித்தார். அந்த கவுண்டி சீசனில்தான் முதன்முறையாக பிங்க் பந்து பரிசோதிக்கப்பட்டது. அப்போதே சதமடித்துவிட்டார் டிராவிட். நாட்டிங்காம்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் எம்சிசி அணியில் ஆடிய ராகுல் டிராவிட், 106 ரன்கள் அடித்தார். அதுதான் பிங்க் பந்தில் இந்திய வீரர் அடித்த முதல் சதம்.